தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ கீதாஜீவன் - ஜீவன் தம்பதியினரின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் சாலையில் உள்ள ஏவிஎம் கமலவேல் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மக்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது மணமக்களை வாழ்த்தி பேசிய ஸ்டாலின், "திமுகவின் குடும்ப வரவேற்பு நிகழ்ச்சி போல் இருக்கிறது. புதுமணத் தம்பதிகளுக்கு நான் புதிதாக எந்த அறிவுரைகளும், ஆலோசனைகளும் சொல்லவேண்டிய அவசியமில்லை. விஞ்ஞான ரீதியில் நாம் நாள்தோறும் வளர்ந்து கொண்டிருக்கிறோம். நாம் படித்தவர்கள். நாள்தோறும் நாட்டு நடப்புகள் பற்றி அன்றாடம் அறிந்து கொண்டிருப்பவர்கள்.
அன்றாடம் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை பற்றி நன்றாக தெரிந்து கொண்டவர்கள். ஆகவே மணமக்களுக்கு நான் ஆலோசனை கூறுவது அதிகப் பிரசிங்கித்தனம் ஆகிவிடும் என எண்ணுகிறேன். மத்தியில் நடக்கும் ஆட்சியாக இருந்தாலும் சரி, மாநிலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய ஆட்சியாக இருந்தாலும் எந்த உணர்விலே நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.
நாடு முழுவதும் எங்கு பார்த்தாலும் போராட்டம், மறியல், சாலை மறியல்கள், கண்டனப் பொதுக் கூட்டங்கள், உண்ணாவிரதங்கள் என இன்று தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் என்ன என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே அது பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை.
ஆனால், அதே நேரத்தில் நாட்டு நடப்புகளை நன்றாக புரிந்துகொண்டு அதற்கேற்ற வகையில் வரக்கூடிய காலங்களில் உங்களுக்காக பாடுபடக் கூடியவர்கள் யார், உங்களோடு உங்களுடைய பணிகளுக்கு துணையாக இருக்கக் கூடியவர்கள் யார், என்பதை அறிந்து அதற்கு பயன்படக்கூடிய வகையில் அதற்கு துணை இருக்கக் கூடிய வகையிலே உங்களுடைய ஆதரவும் முக்கிய கடமை உணர்வை இருந்திட வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.