ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை(மே.19) நடக்கிறது. இந்நிலையில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் பரப்புரை இறுதி நாளான நேற்று பிரதான கட்சிகளின் தேர்தல் பரப்புரை பரபரப்பாக நடைபெற்றது.
இந்நிலையில் திமுக சார்பில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சண்முகையாவுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் இறுதிக்கட்ட பரப்புரையில் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள் பேசுகையில், "நடைபெற இருக்கும் இடைத்தோ்தல் மிக முக்கியமான தேர்தலாகும். மற்ற தேர்தல்களைப் போல சாதாரண தேர்தல் அல்ல. தமிழ் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்கள் விரோத ஆட்சியை மாற்றக்கூடிய தேர்தல். ஆகவே இந்த தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். திமுக தலைவர் மு க ஸ்டாலின் மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் பல்வேறு அம்ச வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு உள்ளார். குறிப்பாக சீவலப்பேரி கால்வாய் மூலமாக ஓட்டப்பிடாரம் தொகுதியில் தண்ணீர் கொண்டு வருவதற்கு திமுக ஆட்சி அமைந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் தங்கு தடையின்றி குடிநீர் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும்", என்றனர்.