தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பரப்புரை பரபரப்பாக நடைபெற்றுவருகிறது. மாநகராட்சிக்குள்பட்ட 20ஆவது வார்டில் தமிழ்நாடு சமூக நலத் துறை அமைச்சரின் சகோதரரும், ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளருமான மறைந்த பெரியசாமியின் மகனான ஜெகன் பெரியசாமி போட்டியிடுகிறார்.
நரிக்குறவர் குடும்பத்தினரிடம் வாக்குச் சேகரிப்பு
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் போல்பேட்டை, சுந்தரராமபுரம், நந்த கோபாலபுரம், பகுதிகளை உள்ளடக்கிய 20ஆவது வார்டு பகுதியில் இன்று அவர் தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இதில், புதிய பேருந்து நிலைய பகுதியில் தற்காலிகக் கூடம் அமைத்து தங்கியிருக்கும் நரிக்குறவர் குடும்பத்தினர்களிடம் அவர் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது நரிக்குறவர் சமூகத்தினர், வேட்பாளர் ஜெகன் பெரியசாமிக்கு பாசி மாலை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து பேசிய அவர்கள், நரிக்குறவ குடும்பத்தினர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் எனவும் அரசு சார்பில் இலவச வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்தனர்.
இதற்குப் பதிலளித்த ஜெகன் பெரியசாமி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றிபெற்று பொறுப்புக்கு வந்தவுடன் நரிக்குறவர் சமூகத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசின் துணையோடு செய்து தருவதாக உறுதியளித்தார்.
தொடர்ந்து நரிக்குறவர் சமூகத்தினர், குழந்தைகள், பள்ளி சிறுவர்கள், சிறுமிகள் வேட்பாளர் ஜெகன் பெரியசாமியுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க: விவகாரம் முடியும்வரை மாணவர்கள் ஹிஜாபோ காவியோ அணியத்தடை: கர்நாடக உயர் நீதிமன்றம்