தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழையால் முத்தம்மாள் காலனி, ராம்நகர் பகுதியில் உள்ள வீடுகளைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்ததால் அங்குள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் சிரமப்பட்டனர். அத்தியாவசியப் பொருட்கள் வாங்க கூட முடியாமல் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அப்பகுதி பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாருக்கு செல்போனில் தொடர்புகொண்டு, வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் சிரமத்தில் இருப்பதாகவும், இதற்கு உதவி செய்திட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உடனடியாக அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர், தூத்துக்குடி திரேஸ்புரம் மீனவர் சங்கத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து, ஆல்டிரின் ஆகியோர் உதவியுடன் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள வீடுகளிலிருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேறுவதற்கு படகு வசதி செய்துகொடுத்தார்.
மேலும் அப்பகுதி மக்களுக்கு உதவுவதற்காக தூத்துக்குடி காவல்துறையின் பேரிடர் மீட்பு படையின் 10 வீரர்களும் வெள்ளம் குறையும் வரை அங்கேயே இருக்குமாறும் உத்தரவிட்டார்.
அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு தங்களுக்கு வாகன வசதி வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டதன் பேரில், காவல்துறை வாகனம் ஒன்றையும் பொதுமக்கள் உதவிக்காக அங்கே நிறுத்திவைக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கையால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அவரை வெகுவாக பாராட்டி நன்றி தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பாலுறவுக்கு கூப்பிட்ட இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த பெண்: வைரல் காணொலி!