தூத்துக்குடி: தமிழ்நாட்டில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் உத்தரவிட்டார்.
தூத்துக்குடியிலும் புதிய பேருந்து நிலையம் அருகே சுமார் 30 ஆண்டுகளாக 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்நிலையில் இவர்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேற்று (நவம்பர் 18) நேரில் சந்தித்து கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
குழந்தைக்குப் பெயரிட்ட மாவட்ட ஆட்சியர்
அப்போது தங்கள் இருப்பிடத்துக்கு நேரில் வருகைதந்த மாவட்ட ஆட்சியரை, பாசி மாலை அணிவித்து நரிக்குறவர்கள் வரவேற்றனர். மேலும் தங்கள் குழந்தைக்குப் பெயர் வைக்கும்படி மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் கோரிக்கைவிடுத்தனர்.
அதனை ஏற்று பெண் குழந்தைக்கு (Narikuravas baby girl) 'முருக வள்ளி' என மாவட்ட ஆட்சியர் பெயர் சூட்டினார்.
குறைகளைக் கேட்டறிந்த பின்னர் அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “நரிக்குறவ இன மக்களுக்கு ஆதார், ரேஷன், வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்க உடனே நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு வீட்டுமனை வழங்கத் தேவையான ஏற்பாடுகள் விரைவில் எடுக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க: கந்து வட்டிக் கொடுமை - தற்கொலை செய்ய அனுமதிக்கக் கோரி பெண் மனு