தூத்துக்குடி: சென்னையில் இருந்து விமானம் மூலம் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தூத்துக்குடி வருகை தந்தார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘நவம்பர் 21ஆம் தேதி நாளை மீனவர் தினம் கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவ சமுதாயம் அதிகமாக இருக்கக்கூடிய இடங்களில் கொண்டாடப்படுகிறது. இதில் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவும் கலந்து கொள்கிறார். அமைச்சர்களும் கலந்து கொள்கிறார்கள்’ என்றார்.
காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரிக்கு பல்வேறு மாவட்டங்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுவது குறித்த கேள்விக்கு? ’சத்தியமூர்த்தி பவனில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற சம்பவத்தில் கருத்து வேறுபாடுகள் உள்ளது. இது சம்பந்தமாக விசாரணைக்கு இந்திய காங்கிரஸ் கமிட்டி விசாரிக்க இருப்பதாகவும், ஒழுங்கு நடவடிக்கை குழுவினரும் விசாரணை செய்து அதன் தகவல்களை அளித்த பின் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தச் சம்பவத்தில் இரு தரப்பினரும் தங்களை விசாரிக்கச்சொல்லி இருப்பதால் ஒவ்வொரு இடங்களிலும் ஆதரவாளர்கள் அவர்களுடைய கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்’ என்றார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலையானது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ’ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலையானது வருத்தத்தை அளிக்கிறது. இவ்விஷயத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு துணை நிற்போம்’ என்றார்.
இதையும் படிங்க:'நிர்பந்தத்தால் தான் திமுக ஆதரவு' - மாஜி முதல்வர் நாராயணசாமி வேதனை!