தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி சிறந்த பரிகாரத் தலமாக விளங்கி வருகிறது. மேலும் இந்தக் கோவில் ஆனது கடற்கரை அருகில் அமைந்திருப்பதால், திருவிழா காலங்களைத் தவிர்த்து, நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 9) விடுமுறை தினம் என்பதால் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் வழக்கம்போல் நடைபெற்றது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் பொது தரிசன வரிசையில் சென்று தரிசனம் செய்யும் பக்தர்கள் சுமார் 5 மணி நேரமும், ரூ.100 கட்டணம் செலுத்தி தரிசனம் செய்யும் பக்தர்கள் சுமார் 3 மணி நேரமும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் விடுமுறை நாள்களில் பல மணி நேரம் நின்று சுவாமி தரிசனம் செய்வதால், பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கோவில் நிர்வாகம் இதனைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துவருகின்றனர்.
இதையும் படிங்க :Today Rasipalan: விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று ஜாக்பாட்!
மேலும் இக்கோயிலுக்கு திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள், சின்னத்திரை நடிகர்கள் எனப் பல சினிமா பிரபலங்களும் கோவிலுக்கு வந்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் பசங்க, மெரினா, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் பாண்டியராஜ் இன்று(ஜூலை 9) திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு நண்பர்களுடன் வந்தார். பின் அவர் கோவிலில் மூலவர், சண்முகர், சத்ரு சம்காரமூர்த்தி, வள்ளி, தெய்வானை, பெருமாள் ஆகிய சந்நிதியில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு புறப்பட்டுச் சென்றார்.
இதையும் படிங்க :Weekly horoscope: வியாபாரத்தில் கவனம் தேவைப்படும் ராசிகள்!