தூத்துக்குடி: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தலைவர் முரசு தமிழப்பன் தலைமையில் பலர் வந்திருந்தனர்.
தொடர்ந்து அவர்கள் திருச்செந்தூரில் அம்பேத்கர் சிலை அமைக்க தடையில்லா சான்று கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முரசு தமிழப்பன், "1988இல் திருச்செந்தூர் நகரில் சட்டமேதை அம்பேத்கர் சிலை அமைப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. அதன்பின் நிலவிய பொருளாதார நெருக்கடி காரணமாக சிலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது.
கிடப்பில் போடப்பட்ட அம்பேத்கர் சிலை அமைக்கும் பணியைத் தொடங்க வலியுறுத்தி, கடந்த 32 ஆண்டுகளாக திருச்செந்தூர் தொகுதிப் பட்டியலின மக்கள் சார்பில் போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால், கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது பட்டியலின மக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்தபோது, அப்போதைய தாசில்தார் தலைமையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வாரத்திற்குள் அம்பேத்கர் சிலை அமைக்க தடையில்லா சான்று வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர்.
ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசு பொறுப்பேற்ற பின்னும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தடையில்லா சான்று வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து 2ஆவது வாரமாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம். எங்களது கோரிக்கையை பரிசீலித்து திருச்செந்தூரில் அம்பேத்கர் சிலை அமைக்க உத்தரவிட வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: திருச்செந்தூரில் அம்பேத்கர் சிலை அமைக்க தடையில்லா சான்று கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்