தூத்துக்குடி: அழிந்து வரும் சண்டை சேவல் இனத்தை பாதுகாக்கும் வகையில் பொங்கல் பண்டிகையையொட்டி, சேவல் சண்டை போட்டிகளுக்கு (Cock Fighting Rooster) தமிழ்நாடு அரசு அனுமதி தர வேண்டும் என சண்டை சேவல் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளன. தென் தமிழ்நாட்டில் பாரம்பரியமிக்க விளையாட்டுகளில் சண்டை சேவல் விளையாட்டும் ஒன்றாகும். பல்வேறு வரலாற்று மற்றும் இலக்கியச் சான்றுகளில் ஆதிகாலம் முதலே தமிழர்கள் சண்டை சேவல் விளையாட்டை விளையாடி வந்ததாக கூறப்படுகிறது.
அழியும் தருவாயில் சேவல் இனங்கள்: இவற்றில் சேவல்கட்டு, கோட்சை, வெப்போர், வெற்றுக்கால் சண்டை, கட்டு சேவல் சண்டை என சேவல்களில் பல பிரிவுகள் உள்ளது. இத்தகைய பாரம்பரியமிக்க சண்டை சேவல்கள் கடந்த சில ஆண்டுகளாக அழிந்து வருகின்றன. இதற்கு அரசும் அனுமதியளிக்காமல் தடை செய்துள்ளது.
இந்த சண்டை சேவலை காலம், காலமாக தூத்துக்குடியைச் சேர்நத ராஜா என்பவர் ஆர்வமுடன் தங்கள் குழந்தைகளைப் போல், வளர்த்து பாதுகாத்து வருகிறார். பொங்கல் பண்டிகையையொட்டி, இந்த சண்டை சேவல்களை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள அவர் சண்டை சேவல்களுக்கு நீச்சல் பயிற்சி, அதற்குரிய சத்தான உணவுகளையும், சண்டை பயிற்சியையும் கற்றுக் கொடுத்து சண்டை செய்ய தயார் செய்து வருகிறார்.
தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை: இந்நிலையில், இந்த சண்டை சேவல் தடை காரணமாக, சண்டை சேவல் வளர்ப்பில் ஈடுபடுவோர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், ஏராளமான சண்டை சேவல் வளர்ப்பில் ஈடுபட்டவர்கள் சண்டை சேவல் வளர்ப்பை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, தமிழ்நாடு அரசு அழிந்து வரும் சண்டை சேவல் இனத்தை பாதுகாக்க 2023 இந்தாண்டு பொங்கல் (2023 Pongal) முதல் சண்டை சேவல் போட்டிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சண்டை சேவல் வளர்ப்பவரான ராஜா நமது ஈடிவி பாரத் ஊடகத்திடம் கூறுகையில், 'தூத்துக்குடியில், குழுக்களாக சேர்ந்து சண்டை சேவல்களை வளர்த்து வருகிறோம். 2 வருடம் முன்னர் சேவல் சண்டைக்கு அரசு அனுமதி அளித்தது. ஆனால், தற்போது அனுமதி இல்லை.
சேவல் சண்டைக்கு நல்ல முறையில் பயிற்சி அளித்து, சேவல்களுக்கு சத்தான உணவுகள் அளித்து தயார் நிலையில் வைத்துள்ளோம். காலை நேரத்தில் பேரீச்சபழம், அத்திபழம், பாதம், பிஸ்தா மதிய இடைவெளி விட்டு விட்டு, இரவு நேரத்தில் தயார் மாவு என்று சொல்ல கூடிய ஊட்டச்சத்து மாவு, முட்டையின் வெள்ளைக்கரு போன்ற உணவுகள் அளித்து பிள்ளை மாதிரி வளர்த்து வருகிறோம்.
சேவல் சண்டைக்கு அனுமதி தருக: இந்த சேவல் வளர்ப்பினால் தீய பழக்க வழக்கங்கள் எங்களை நெருங்குவது இல்லை. மேலும், சேவல்களை வருங்காலங்களில் ரேஷன் கார்டுகளில் எங்களுடன் சேர்க்க ஆசையாக உள்ளது. இதற்கு அரசு அனுமதி தரலாம் எனக்கூறிய அவர், தற்போது பொங்கல் பண்டிகைக்கு சேவல் சண்டைக்கு அனுமதி தரவேண்டும்' என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: உத்தமர் காந்தி விருதுக்கு விண்ணப்பிக்க அரியலூர் ஆட்சியர் அழைப்பு!