தூத்துக்குடி: மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் (DOT & TRAI) அளித்த அறிக்கையில், கடந்த 2021 ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் சிம்கார்டுகள் போலியாக ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளதாக விபரங்கள் அளித்திருந்தது. அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், தூத்துக்குடி மேலசண்முகபுரம் பகுதியை சேர்ந்த வினோதினி என்பவர் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி சைபர் குற்றப் பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து கூடுதல் காவல்துறை இயக்குநர் சஞ்சய்குமார், சைபர் குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் தேவராணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் ஆகியோரின் உத்தரவின்படி, தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) கோடிலிங்கம் மேற்பார்வையில், சைபர் குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையிலான சைபர் குற்ற பிரிவு தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில், தூத்துக்குடி பிரையண்ட் நகரை சேர்ந்த பொன்ராஜ் மகன் ராயன்(38) என்பவர் வெங்கடேஸ்வரா எண்டர்பிரைசஸ் என்ற தனியார் சிம்கார்டு டீலர்ஷிப் கடை மூலம் சுமார் 620 போலியான சிம்கார்டுகளை ஆக்டிவேசன் செய்து உள்ளார் என்பதும், கடைக்கு ஜெராக்ஸ் எடுக்கவரும் நபர்களின் ஆதார் விவரங்களை பயன்படுத்தி பல போலியான சிம்கார்டுகளை ஆக்டிவேட் செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, தனிப்படை போலீசார் குற்றம் சுமத்தப்பட்ட ராயன் என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த 2 செல்போன்கள் மற்றும் 3 சிம்கார்டுகளையும் பறிமுதல் செய்தனர். அதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், இதேபோன்று பல நபர்கள் செல்போன் டீலர்ஷிப் என்ற பெயரில் பொதுமக்களின் ஆதார் கார்டு மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தி, போலி சிம்கார்டுகளை ஆக்டிவேட் செய்துள்ளதாகவும், பல சட்டவிரோத செயல்களுக்கு அந்த சிம்கார்டுகளை விற்பனை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.
மேற்படி போலி சிம்கார்டுகளை ஆக்டிவேட் செய்த குற்றவாளியை கைது செய்து செல்போன்களை பறிமுதல் செய்த சைபர் கிரைம் போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் பாராட்டுக்களைத் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மத்திய அரசின் https://tafcop.sancharsaathi.gov.in/ என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் தங்கள் செல்போன் எண்களை பதிவு செய்து, தங்கள் செல்போன் எண்களுடன் எத்தனை போலியான செல்போன் எண்கள் இணைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
மேலும் தங்களுக்கு தெரியாமல் கூடுதல் எண்கள் இணைக்கப்பட்டிருந்தால், அந்த இணையதளம் மூலமே உடனடியாக அந்த செல்போன் எண்களை செயலிழக்கச் செய்ய முடியும். மேலும் பொதுமக்கள் ஜெராக்ஸ் எடுக்க கடைகளுக்கு செல்லும்போது, கடைக்காரர்களுக்கு வாட்ஸ்அப் மூலமோ, இமெயில் மூலமோ ஆதார் கார்டு போன்ற விவரங்களை அனுப்பும்போது, பிரின்ட் எடுத்த பின்னர் அவர்களிடம் உள்ள தங்களின் ஆவணங்களை அழித்துவிட்டனரா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: Morocco earthquake : மொராக்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... 300 பேர் பலி!