தூத்துக்குடி: திருச்செந்தூர் அடுத்த முள்ளக்காடு சாலையில் உள்ள பேக்கரியில் புழுக்களுடன் வாடிக்கையாளர்களுக்கு கேக் விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி அருகே உள்ள பொட்டல் காடு பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி ராஜா. இவருக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்ததை கொண்டாட உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு திருச்செந்தூர் சாலையில் உள்ள முள்ளக்காடு பகுதியில் அமைந்துள்ள ஆதிரா'ஸ் என்ற கேக் ஷாப்பில் 450 ரூபாய்க்கு கேக் வாங்கி உள்ளார்.
பின் அதனை எடுத்து சென்று தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்த நிலையில் அவர்கள் கேக் பார்சலை பிரித்து கேக்கை சாப்பிட்டுள்ளனர். அப்போது கீழே இருந்த கேக்குகள் அனைத்தும பூஞ்சை படர்ந்து கெட்டுப் போய் இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
மேலும், மற்றொரு பாக்ஸில் இருந்த கேக்கில் அதிக நிறமூட்டப்பட்ட ரோஸ் வண்ண சாயம் கேக்கை எடுத்தவர்களின் கையில் ஒட்டும் வகையில் இருந்ததாகவும், ஒரு சில கேக்குகளில் புழுக்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த இசக்கி ராஜா உடனடியாக தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு போன் செய்து அந்த கேக்கை சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மூழ்கி 2 மாணவிகள் பலி! பெற்றோர் கதறல்!
பின்னர் தனது நண்பர்களுடன் ஆதிரா'ஸ் கேக் ஷாப்புக்கு சென்று கெட்டுப்போன கேக்கை எவ்வாறு கொடுத்தீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு கேக் ஷாப் நிறுவனம் முதலில் முறையாக பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர் தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு தகவல் அளித்துள்ளார்.
ஆனால் தகவல் அளித்து சுமார் 2 மணி நேரம் ஆகியும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த கடையை சோதனை செய்ய வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட நபர் மற்றும் அவரது உறவினர்கள் கடை உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உணவு பாதுகாப்புத் துறைக்கு தகவல் அளித்ததை அறிந்த கடை ஊழியர்கள் கெட்டுப் போன கேக்கை உடனடியாக அகற்றியதாக சொல்லப்படுகிறது.
இதுபற்றி, பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், "தூத்துக்குடி, திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள இந்த கேக் ஷாப்பில் திருச்செந்தூர் கோயிலுக்கு செல்பவர்கள், வெளியூரிலிருந்து வருபவர்கள் என ஏராளமானோர் வந்து கேக் மற்றும் தின்பண்டங்களை சாப்பிட்டும் வாங்கியும் செல்கின்றனர்.
ஆனால் முறையாக உணவு பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் கெட்டுப்போன உணவு பதார்த்தங்களை இந்த கடை ஊழியர்கள் விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரியிடம் புகார் அளித்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து கடை உரிமையாளரிடம் கேட்டபோது, "கடையில் தினமும் தரமான புதிய கேக்குகள் தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது, கேக் தட்டில் சிறிது தண்ணீர் இருந்ததால் கேக் பூஞ்சை படர்ந்து விட்டது. இனிமேல் இப்படி நடக்காத அளவுக்கு கவனமாக இருப்போம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தனியார் நிதி நிறுவனத்தால் பறிபோன உயிர்? கடனை கட்ட தாமதமானதால் நிதி நிறுவனம் மிரட்டலா? பெண்ணின் தற்கொலையில் நடந்தது என்ன?