தூத்துக்குடி: கோவில்பட்டி நகராட்சி கூட்ட அரங்கில் இன்று (அக்.31) நகர்மன்ற தலைவர் கருணாநிதி தலைமையில், நகராட்சி ஆணையாளர் கமலா முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், பங்கேற்ற நகர்மன்ற உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளில் வசிக்கும் மக்களுக்குத் தேவைப்படும் அடிப்படைத் தேவைகளான சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு ஆகியவற்றைச் சீரமைத்துத் தரக் கோரிக்கை முன்வைத்தனர்.
அப்போது பேசிய 32 வது வார்டு அதிமுக நகர்மன்ற உறுப்பினர் கவியரசன், பாரபட்சம் இல்லாமல் நகர் மன்ற உறுப்பினர்களின் வார்டுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து, பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், தன்னுடைய வார்டில் வசிக்கும் மக்கள், தங்கல் வார்டில் மட்டும் ஏன் எந்த நலத்திட்டப் பணிகளையும் தொடங்கவில்லை என கேள்வி எழுப்புவதாகக் கூறினார். அதன் பின்னர் பேசிய 22வது வார்டு திமுக நகர்மன்ற உறுப்பினர் ஜாஸ்மின் லூர்து மேரி பேசும் போது, தனது வார்டில் சாலை, குடிநீர் உள்ளிட்ட பணிகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று கூறினார்.
குறிப்பாகத் தனது வார்டுக்கு உட்பட்ட, காமராஜர் தெரு, காசிராஜன் தெரு, உள்ளிட்ட தெருக்களில் சுமார் 200 வீடுகள் உள்ளதாகவும், அப்பகுதிகளில் 6 மாத காலமாகக் குடிநீர் வரமால் மக்கள் அவதிப்படுவதாகவும் தெரிவித்தார். இது குறித்து பல முறை புகார் அளித்தும் நடவடிக்கைகள் எதுவும் நடக்கவில்லை என குற்றம் சாட்டினார்.
மேலும் இப்பிரச்சினையைத் தீர்க்க நிதி இல்லை என்றால், தனது தாலி சங்கிலியைக் கழற்றி தர தயாராக இருப்பதாக உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார். அதன் பின்னர் இதை போன்று உணர்ச்சி வசப்பட்டுப் பேசக்கூடாது என நகர்மன்றத் தலைவர் அறிவுறுத்தினார். மேலும் அவர் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
மேலும் அக்கூட்டத்தில், தினசரி சந்தை கடைகள் இடித்த போது அதில் பழுதடைந்த பொருட்கள் ஏலம் இடுவது, நகராட்சிக்குட்பட்ட கட்டணக் கழிப்பிடம் டெண்டர் விடுவது, நகராட்சியோடு 7 ஊராட்சி இணைத்து விரிவாக்கம் செய்வது உட்பட 14 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் காலியாக உள்ள எம்பிபிஎஸ் படிப்பில் சேர புதிதாக விண்ணப்பிக்கலாம்!