தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவினால் 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கரோனா பாதிப்புக்குள்ளான பகுதிகள் 9 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களை தன்னார்வலர்கள் மூலம் வழங்கி பொதுமக்கள் தேவையை மாவட்ட நிர்வாகம் பூர்த்தி செய்துவருகிறது.
இதற்காக இரண்டாயிரத்து 500-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மாவட்டம் முழுவதும் பணிபுரிந்துவருகின்றனர். கரோனா தடுப்புப் பணியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் தங்களை தன்னார்வலராகப் பதிவுசெய்து களப்பணி செய்துவந்தனர். இந்நிலையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட தன்னார்வலர்கள் அடையாள அட்டையை திரும்ப ஒப்படைக்குமாறு அரசு அலுவலர்கள் கடந்த சில நாள்களாக வற்புறுத்திவந்ததாகத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் காப்பர் நிர்வாகம் சார்பில் தமிழ்நாட்டிற்கு கரோனா நிவாரணமாக ஐந்து கோடி ரூபாய் வழங்கியது. அந்தத் தொகையை தமிழ்நாடு அரசு பெற்றுக் கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாகவும், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகள் என்பதற்காக மட்டும் தன்னார்வலர்கள் அடையாள அட்டையை திருப்பி வழங்குமாறு அலுவலர்கள் வற்புறுத்தியதைக் கண்டித்தும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜேஷ், குமரெட்டியாபுரம் மகேஷ், மெரினா பிரபு உள்ளிட்டோர் தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகம் மூலமாகத் தங்களுக்கு வழங்கப்பட்ட தன்னார்வலர்கள் அடையாள அட்டையை இன்று திரும்ப ஒப்படைத்தனர்.
பின்னர் இது குறித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் ஆலை வழங்கிய கரோனா நிதி ஐந்து கோடி ரூபாயைப் பெற்றுக்கொண்டது வெட்கக்கேடானது.
இது தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான ஊழலுக்கு வழிவகுக்கும். அரசு அலுவலர்கள் நேரடியாகவே ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு அவர்களுக்காகவே பணிபுரிகின்றனர். இதை நாங்கள் நேரடியாகவே குற்றம்சாட்டுகிறோம்.
தமிழ்நாட்டில் கட்சிகளுக்குள் மட்டும் ஸ்லீப்பர் செல்கள் இருப்பதாகக் கருதவில்லை. ஸ்லீப்பர் செல் அரசு அலுவலர்கள் இருப்பதாக எண்ணுகிறோம். எனவே, அரசு உடனடியாக மாவட்ட நிர்வாகத்தில் தலையிட்டு தவறு செய்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசின் ஆட்சி நடைபெறாமல் ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் ஆட்சிதான் நடைபெறும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:‘அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்’ - ஸ்டாலின் காட்டம்