இந்தியக் கடலோர காவல் படையினர் கன்னியாகுமரி கிழக்கு கடல் எல்லைப் பகுதியில், ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, கன்னியாகுமரி கிழக்கு கடல்பகுதியில் 70 நாட்டிக்கல் மைல் தொலைவில், இலங்கையைச் சேர்ந்த சுகந்தி, செரல், நெட்மி ஆகிய 3 மீன்பிடிப் படகுகள் எல்லை தாண்டி வந்து, மீன்பிடித்ததாகத் தெரிகிறது.
அதில் வந்த 15 பேரைக் கடலோர காவல் படையினர் கைது செய்து, தூத்துக்குடி கடலோர காவல் படைக்குத் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில், இன்று காலை தூத்துக்குடி கடல் எல்லைக்குள் அழைத்துவரப்பட்ட அவர்களுக்கு துறைமுக மருத்துவக் குழுவினர், கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா எனப் பரிசோதனை செய்தனர்.
இதைத் தொடர்ந்து இலங்கை மீனவர்களைக் கைது செய்து, ராமேஸ்வரம் சிறையில் அடைப்பதா? அல்லது அவர்களின் நாட்டுக்கே திருப்பி அனுப்புவதா என்பது குறித்து துறைரீதியாக உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதில், கைது செய்யப்பட்ட மீனவர்களை அவர்களின் நாட்டுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்ட நிலையில், அவர்களை இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்த 14 நாட்கள் அவர்களை மருத்துவக் கண்காணிப்பில் வைக்க வேண்டும். கொரோனா வைரஸ் எதிரொலியால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே, தமிழ்நாட்டில் கொரோனோ தொற்று பரவாமல் தடுக்க, சென்னை துறைமுகத்துக்கு வெளிநாட்டுக் கப்பல்கள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஈரானில் சிக்கி தவிக்கும் தமிழ்நாடு மீனவர்கள் - மீட்காத அரசுகளை கண்டித்து போராட்டம்