தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள ஆர்.சி.தேவாலயத்தின் பங்குத் தந்தையாக உள்ளவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர், கடந்த 10ஆம் தேதி கரோனாவால் உயிரிழந்த கோவில்பட்டி சீனிவாசநகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று வந்ததால் தொற்று பரவியது என கூறப்படுகிறது.
துக்க நிகழ்ச்சிக்கு சென்று வந்த பலருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், தற்போது பங்குத் தந்தைக்கும் தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், துக்க நிகழ்ச்சிக்கு சென்று வந்த அனைவரையும் உடனடியாக கண்டறிந்து தனிமைப்படுத்தாததே அதிகம் பரவ காரணம் என கூறப்படுகிறது.
இதேபோல் கோவில்பட்டி மார்க்கெட் சாலையில் உள்ள கடலை மிட்டாய் கடையில் பணிபுரியும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் கடந்த வாரம் உடல் நிலை சரியில்லாததால், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்ற போது அங்கு அவருக்கு கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொண்டதில் உறுதி செய்யப்பட்டுள்ளது.