கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளன. அதில் மீன்பிடித் தொழிலும் அடங்கும். இதைத் தொடர்ந்து மீனவர்களின் கோரிக்கையை ஏற்று, நிபந்தனைகளுடன் மீன்பிடித் தொழிலுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்பேரில், சுழற்சி முறையில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுவருகின்றனர். இந்நிலையில், மீன்பிடித் தொழிலுக்கு மிக முக்கியமாகப் பயன்படுத்தப்படும் ஐஸ் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடலில் பிடிக்கும் மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்க ஐஸில் வைத்து கரைக்குக் கொண்டு வந்து விற்பனை செய்வர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 50 நாட்டுப் படகுகள் மட்டுமே கடலுக்குச் சென்று வருவதால், ஐஸ் கட்டிகளும் குறைந்த அளவிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. இருப்பினும், மின் கட்டணம் எப்போதும் போல் அதிகமாகவே காணப்படுகிறது. இதன் காரணமாக, ஐஸ் உற்பத்தியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதுகுறித்து சிலுவைப்பட்டியைச் சேர்ந்த ஐஸ் கம்பெனி உரிமையாளர் டொமினிக் கூறுகையில், “தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 25 ஐஸ் உற்பத்தி செய்யும் கம்பெனிகள் உள்ளன. இக்கம்பெனிகள் மூலமாக சுமார் 2 ஆயிரம் பேர் வேலை செய்து வருகின்றனர். ஊரடங்கு காரணமாக, சுமார் ஒரு மாதமாக கம்பெனிகள் மூடப்பட்டிருந்தன.
தற்போது மீன்பிடிப் படகுகள் குறைந்தளவில் செல்வதால் ஐஸ் கம்பெனிகள் மீண்டும் இயங்குகின்றன. முன்பு மாதம், 400 ஐஸ்கட்டிகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. இதற்கு, ரூ.3 லட்சம் மின்கட்டணம் செலுத்தினோம். தற்போது, 100 ஐஸ் கட்டிகள் கூட உற்பத்தி செய்யப்படவில்லை. ஆனாலும், ரூ.3 லட்சம் வரை மின்கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதனால் ஐஸ் உற்பத்தி பெரிதும் பாதித்துள்ளது.
அதே போன்று 5 விழுக்காடு ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதனால் நாங்கள் பெரும் இழப்பைச் சந்தித்து வருகிறோம். ஏற்கனவே மூடப்பட்ட ஐஸ் கம்பெனியில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்குவதற்கு சுமார் ரூ.2 லட்சம் வரை செலவாகிறது. இதனால் ஐஸ் தொழில் நலிவடைந்து உள்ளது. ஆகையால், அரசு மின்கட்டண சலுகை அளிக்க வேண்டும். மானிய விலையில் மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐஸ் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க...இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய இரு காவலர்கள் பணியிடை நீக்கம்!