தூத்துக்குடி: கரோனா 3ஆவது அலை எச்சரிக்கையையொட்டி தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுவருகின்றன. அதன்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட ரோச் பூங்கா அருகே இந்திய மருத்துவக் கழகம், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் இன்று (ஆக. 3) காலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் நேரு தலைமை தாங்கி பொதுமக்களுக்கு இலவச முகக்கவசங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ”தமிழ்நாடு அரசு கரோனா 3ஆவது அலை எச்சரிக்கையையொட்டி வரும் வாரத்தை கரோனா விழிப்புணர்வு வாரமாகக் கடைப்பிடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இந்திய மருத்துவக் கழகம் சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசங்கள் வழங்கி கரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றோம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சீரிய நடவடிக்கையினால் கரோனா பாதிப்பு குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பாதிப்பினால் 20-க்கும் குறைவானவர்களே சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
அதேபோல அதிகரித்துவந்த கறுப்புப் பூஞ்சை நோய்த்தொற்றும் குறைந்து தற்போது 15-க்கும் குறைவான நபர்கள் கறுப்புப் பூஞ்சை பாதிப்புக்குச் சிகிச்சைப் பெற்றுவருகிறார்கள். கரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து ஏற்பாடுகளும் விரிவாகச் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதியுடன்கூடிய படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது தவிர குழந்தைகளுக்குத் தீவிர சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. பரிசோதனைகளை அதிகளவு நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து நிலைகளிலும் கரோனா 3ஆவது அலையை எதிர்கொள்ள தூத்துக்குடி மாவட்டம் தயாராக உள்ளது” என்றார்.