தூத்துக்குடி: நாசரேத் திருமண்டல திருச்சபைகள் கட்டுப்பாட்டின் கீழ் தங்கம்மாள்புரம் தேவாலயம் இயங்கி வருகிறது.
இந்தத் தேவாலயத்தில் தேர்தல் தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று (ஜூலை 20) இரவு இருதரப்பை சேர்ந்த நபர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 3 பேர் வெட்டுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது.
வழி மறித்து தாக்குதல்
இந்தச் சம்பவம் குறித்து தங்கம்மாள்புரம் திருச்சபையின் ஒருதரப்பை சேர்ந்த பொன் ரத்தினராஜ் கூறுகையில், "திருச்சபையில் தேர்தல் நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்சினை இருந்து வந்தது.
திருச்சபையின் போதகரை சந்தித்து விட்டு வருகையில் எதிர் தரப்பை சேர்ந்த சுதிஸ், ஜெபராஜ், ஜெபஸ்டின் ஆகியோர் சேர்ந்து என்னை வழி மறித்து தாக்கினர்.
இதில் எனக்கு கழுத்து கை, கால், தலையில் பலத்த அடிப்பட்டது. அரிவாளால் வெட்ட வந்ததுடன் கொலைமிரட்டலும் அவர்கள் விடுத்து சென்றனர்.
ஆனால், நான் ரவுடிகளை ஏவி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பொய்யாக சித்தரித்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர்" என்றார்.
ரவுடிகளிடமிருந்து மீட்பு
எதிர் தரப்பை சேர்ந்த சுதிஸ் கூறுகையில், "எனது இருச்சக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பி விட்டு திரும்பி வரும் வழியில் ரத்தினராஜ் என்பவர் 3 பேருடன் சேர்ந்து என்னை வழிமறித்தார். பின்னர், பயங்கர ஆயுதங்களால் என்னை அவர்கள் வெட்ட முயன்றனர்.
அப்போது எனது கையில் வெட்டு விழுந்தது. அந்நேரம் அங்கு வந்த ஜெபராஜ் ரவுடிகளிடமிருந்து என்னை மீட்டார்" என்றார்.
அரசியல் தலையீடு
திருச்சபை தேர்தல் தொடர்பாக நடந்த இந்த மோதலில் அரசியல் தலையீடும் இருப்பதாக தெரிகிறது. எனவே இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தேவாலயத்தில் சொத்துகள் வாங்கியதில் முறைகேடு: பொதுமக்கள் போராட்டம்