தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மணிமுத்தாறு, அணையிலிருந்து 72 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், தாமிரபரணி ஆற்றுப்படுகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வெள்ளம் சூழ்ந்துள்ள குடியிருப்பு பகுதிகளை ஆட்சியர் செந்தில்ராஜ் இன்று (ஜனவரி 14) ஆய்வு செய்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய அவர், தூத்துக்குடி மாவட்டத்தில் கொங்கராயகுறிச்சி, ஆழ்வார்தோப்பு, புன்னகையில் ஆகிய பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், அந்த பகுதிகளில் உள்ள 100 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும், இந்த பகுதியில் தடுப்பணை கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
அளவுக்கு அதிகமான நீர்வரத்து உள்ள போதிலும் நிலைமைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட ஆட்சியர், தண்ணீர் ஓடுவதை வேடிக்கை பார்க்காமல் பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.