தூத்துக்குடி: புதிய பேருந்து நிலையம் அருகே வேளாண்மை கூட்டுறவு விற்பனைக் கடன் சங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பெட்ரோல் டீசல் விற்பனை நிலையத்தை தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று(ஜூலை 11) திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன் உள்பட பல அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கத்தின் புதிய உறுப்பினர்கள் 847 பேருக்கு, 4 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகளைக் கூட்டுறவு துறை அமைச்சர் வழங்கினார்.
விரைவில் கல்விக்கடன், சுய உதவிக் குழு கடன் ரத்து
பின்னர் நிகழ்ச்சியில் பேசி அவர்," தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்களில் எவ்வளவு பேர் வந்து கடன் கேட்டாலும் அதை வழங்க வேண்டும். அதற்கான நிதியை தமிழ்நாடு அரசு வழங்க தயாராக உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் பல்நோக்கு மையமாக மாற்றுவதற்கான திட்டம் விரைவில் கொண்டுவரப்படும். கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட்ட கல்விக் கடன், சுய உதவிக்குழு கடன் ஆகியவை அரசால் தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
இப்போது நடப்பது, சொன்னதைச் செய்கின்ற ஆட்சி. தற்போது மங்கிய நிலையில் இருக்கும் சிறு வணிக கடன் திட்டம் அதிகரிக்கப்படும். சுய உதவிக் குழுக்களுக்கு எல்லா வகை கடனும் கொடுக்க அரசு தயாராக உள்ளது.
கூட்டுறவு சங்கங்கள் மக்கள் இயக்கமாக வேண்டும்
தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.33 கோடிக்கு நகைக்கடன் வழங்கியதாக கூட்டுறவு சங்க பணம் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக நடந்திருக்க கூடிய முறைகேடுகள் குறித்து வரும் 15-ந்தேதிக்குள் அறிக்கை தர வேண்டும் என எல்லா மாவட்ட இணைப்பதிவாளருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்கங்கள் மக்கள் சொத்து, அது மக்கள் இயக்கமாக மாற்றப்பட வேண்டும். தமிழ்நாட்டில் எந்தந்த பகுதிகளில் பகுதிநேர நியாய விலைக்கடைகள் கட்ட வேண்டும், அதற்கான நிதி ஆதாரம் என்ன என்பது குறித்து தமிழ்நாடு அரசு ஆய்வு செய்து வருகிறது.
தேவையான பகுதிகளில் கூட்டுறவு மருந்தகங்கள், விவசாய பொருட்களை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு, விற்பனை நிலையம் அமைக்கப்படும்" என்றார்.
இதனையும் படிங்க: பிராந்தியம் ஜாதியின் பெயரால் தமிழர்களை பிளவுபடுத்த திட்டமிடுகிறது பாஜக - திருமாவளவன்