மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலை நடைபெற்று வரும் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பழைய பேருந்து நிலையம், தற்காலிக பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து தற்காலிக பேருந்து நிலையத்திற்கு சென்று அங்கு பயணிகளுக்கு செய்துதரப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கனிமொழி, "தூத்துக்குடியில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் சரியாக செய்து கொடுக்கப்படவில்லை. மழைக்காலம் நெருங்கி வருவதால், பயணிகள் ஒதுங்கி நிற்பதற்குக் கூட இடமில்லை. மேலும், கழிப்பிடங்கள், குடிநீர் வசதி ஆகியவையும் போதுமான அளவில் இல்லை. ஆகவே இவற்றையெல்லாம் பயணிகளுக்கு செய்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயணிகளுக்கு செய்து கொடுக்க வேண்டிய அடிப்படை வசதிகள் அனைத்தும் தற்காலிகமானதாக இருந்தாலும், அவற்றை சரியாக செய்து கொடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார். பின்னர், மருத்துவர் வரைவு மசோதா குறித்த நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், "நாடாளுமன்றத்தில் திமுக அதைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. திமுகவின் கோரிக்கைகளை மத்திய அரசு விரைவில் ஏற்றுக்கொள்ளும். இங்குள்ள நிலைமைகளை புரிந்து கொண்டு அதில் மாற்றம் கொண்டு வரும்" என்றார்.