தூத்துக்குடி மாவட்டத்தில், அம்மாவட்ட காவல் கணகாணிப்பாளர் முரளி ரம்பா தலைமையில் காவல் துறையினரின் கொடி அணிவகுப்பு நிகழ்சி நடைபெற்றது. தூத்துக்குடி காரப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய இந்த அணிவகுப்பு, பழைய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
இதன் பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக தூத்துக்குடி வந்துள்ள வெளி மாநில போலீசார் மற்றும் மத்திய ஆயுதப்படை போலீசார் ஆகியோருடன் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், ஆயுதப்படையினரும் தூத்துக்குடியில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் மத்திய ஆயுதப்படை போலீசார் மற்றும் வெளிமாநில சிறப்பு காவல் படை போலீசார் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். இவர்கள் வல்லநாடு, திருச்செந்தூர், விளாத்திக்குளம், கோவில்பட்டி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் தங்கி முகாமிட இருக்கின்றனர்.
தற்போது எட்டு மணி நேரம் சுழற்சிப் பணியில் ஈடுபட்டு வந்த போலீசார், இன்று முதல் 12 மணி நேரம் பணியில் ஈடுபட உள்ளனர்" என தெரிவித்தார்.