தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு அரசன் குளத்தில் காந்தாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் கோயில் கொடை விழா நடந்து முடிந்தது. இக்கோயிலில் காலையில் இதே பகுதியை சேர்ந்த சுடலி என்பவர் சாமி கும்பிட கோயிலுக்கு வந்தபோது உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து ஊர் நாட்டாமைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து நாட்டாமை கயத்தாறு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கயத்தார் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அம்மன் கோயில் முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடு போனதும், சுடலை கோயிலில் உண்டியல் உடைக்கப்பட்டு வெள்ளி காப்பு திருடு போனதும் கோயிலுக்கு வெளியே இருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு பணம் திருடு போனதும் தெரிய வந்துள்ளது.
பின்னர், கோயிலில் இருந்த சிசிடிவியை காவல் துறையினர் ஆய்வு செய்ததில் நள்ளிரவில் 3 நபர்கள் கோயிலுக்குள் வருவதும் இரும்பு கம்பியால் உண்டியலை உடைத்து டி-சர்ட்டில் பணத்தை கட்டி செல்வதும் பதிவாகியுள்ளது. தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். சிசிடிவியில் பதிவாகியுள்ள உருவத்தை வைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:வீடியோ: மயிலாடுதுறை திரௌபதி அம்மன் கோயில் 31ஆம் ஆண்டு தீமிதி திருவிழா