தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் துறையினர் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் 10 பேர் மீதும் கொலை உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இதில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 5 பேரை சிபிஐ தங்கள் காவலில் எடுத்து, மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அதேபோல் காவலர் முத்துராஜை சிபிஐ அலுவலர்கள் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் காவல் நிலையத்தில் வைத்து காவல் துறையினர் எப்படித் தாக்கினர், இரு தரப்பினரிடையே முன்விரோதம் ஏதும் இருந்ததா? என பல்வேறு கோணங்களில் சிபிஐ அலுவலர்கள் அவரிடம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் அடைக்கப்பட்டிருந்த கோவில்பட்டி கிளைச் சிறைக்கு சிபிஐ ஏடிஎஸ்பி விஜயகுமார் சுக்லா, ஆய்வாளர்கள் அனுராக் சின்கா, பூரண் குமார், உதவி ஆய்வாளர்கள் சுசில்குமார் வர்மா, சச்சின், சிபிஐ காவல் துறையினர் அஜய்குமார், சைலேந்திர குமார், பவன்குமார், திரிபாதி உள்ளிட்ட அலுவலர்கள் இன்று(ஜூலை 18) மாலை 6.50 மணிக்கு வந்தனர்.
அவர்கள் சிறையில் தந்தை, மகன் அடைக்கப்பட்டிருந்தபோது பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்தனர். ஜூன் 20ஆம் தேதி ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் சிறைக்கு அழைத்து வரப்பட்டபோது அவர்களுக்கு காயங்கள் ஏதும் இருந்ததா? என விசாரணை நடத்தினர். மேலும், சிறை கண்காணிப்பாளர், வார்டன்களிடம் விசாரணை நடத்தினர்.
தந்தை, மகன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அறையையும் பார்வையிட்டு, அவர்களுடன் அடைக்கப்பட்டிருந்த கைதிகளிடமும் விசாரணை மேற்கொண்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.
இதையும் படிங்க: இளைஞர் சரமாரியாக வெட்டிப் படுகொலை - இரண்டு மணி நேரத்தில் கொலையாளிகள் கைது