தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளத்தில் கடந்த மே மாதம் 18ஆம் தேதி ஜெயக்குமார் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் தெற்கு பேய்குளத்தைச் சேர்ந்த துரை என்பவரை சாத்தான்குளம் காவல்துறையினர் தேடிவந்தனர்.
இந்நிலையில் ஜெயக்குமார் கொலை வழக்கில் எந்த சம்பந்தமும் இல்லாத துரையின் தம்பி மகேந்திரனை மே 23ஆம் தேதி காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். விசாரணையின்போது காவல்துறையினர் மகேந்திரனை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட மகேந்திரன் ஜூன் 11ஆம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து ஜூன் 13ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி மகேந்திரன் உயிரிழந்தார்.
மகேந்திரனின் தாயார் வடிவு தனது மகனை சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் உள்ளிட்ட காவல்துறையினர் தாக்கியதில்தான் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகக் கூறி மதுரை உயர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிமன்றம் அதனை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இதன்படி, சிபிசிஐடி காவல் துணை கண்காணிப்பாளர் அனில்குமார் தலைமையிலான காவல்துறையினர் மகேந்திரன் குடும்பத்தினர்கள் உள்பட 14 பேரிடம் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து, வழக்கின் முக்கிய நபரான மகேந்திரனின் சகோதரர் துரையிடம் பேய்குளம் வருவாய் ஆய்வாளர் குடியிருப்பில் சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் தலைமையில் சிபிசிஐடி காவல் ஆய்வாளர் சபிதா விசாரணை நடத்தினார்.
அடுத்தக்கட்ட விசாரணைக்காக இன்று (ஜூலை 28) மகேந்திரனின் உறவினர்கள் ராஜா, கண்ணன் (மகேந்திரனின் உறவினர்கள்), மணி, மாடசாமி உள்ளிட்ட நான்கு பேர் தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகினர்.
இவர்களிடம் தனித்தனியாக சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து, ஆகஸ்டு 7ஆம் தேதி வழக்கு விசாரணை குறித்த அறிக்கையை மதுரை உயர் நீதிமன்ற கிளையில் சிபிசிஐடி காவல்துறையினர் தாக்கல் செய்ய உள்ளனர்.
இதையும் படிங்க... பேய்குளம் மகேந்திரன் வழக்கு: சிபிசிஐடி போலீஸ் விசாரணை!