தூத்துக்குடி: விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலத்தில் விதிமுறைகளை மீறியதாக 11 வாகனங்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
நாடு முழுவதும் (செப்.18) விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வது தொடர்பாகவும், விஜர்சனம் செய்வது தொடர்பாக கலந்தாய்வு கூட்டமானது செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
மேலும், இந்த கலந்தாய்வு கூட்டமானது காவல் நிலைய அளவிலும், உட்கோட்ட அளவிலும் நடைபெற்றது. இதில் இந்து அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: வாடகை கார் ஓட்டுநர் வங்கியில் டெபாசிட்டான ரூ.9ஆயிரம் கோடி.. இன்ப அதிர்ச்சியில் மிரண்டு போன ஓட்டுநர்!
அதனைத்தொடர்ந்து, கூட்டத்தில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வது தொடர்பாகவும், விஜர்சனத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பாகவும், தனித்தனியாக அறிவுரைகள் வழங்கப்பட்டு, ஆணைகள் பிறப்பித்து அனைவராலும் ஏற்றுக்கொள்வதாக எழுத்து மூலமான உத்தரவாதம் பெறப்பட்டது.
இந்நிலையில், செப்டம்பர் 18 ஆம் தேதி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, நேற்று (செப்.20) விஜர்சன ஊர்வலம் நடைபெற்றது. இந்த விஜர்சன ஊர்வலத்தில் வந்த வாகனங்களில் 11 வாகனங்கள் விதிமுறைகளை மீறி, அதிக ஒலி எழுப்பக்கூடிய ஸ்பீக்கர்களை வாகனங்களில் வைத்துக் கொண்டு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஒலி எழுப்பிக் கொண்டு சென்றதாக கூறப்பட்டு உள்ளது.
மேலும், ஊர்வலத்தில் கலந்து கொண்டு விதிமுறைகளை மீறியதால் மேற்படி வாகனங்கள் மீது காவல்துறையினரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வாகனங்களிடம் 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புதுக்கோட்டையில் விநாயகர் சிலை மரக்கிளையில் சிக்கியதால் ஊர்வலம் தாமதம்..போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர்..