தூத்துக்குடி: தூத்துக்குடி ஐயப்பன் நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர், பால்பாண்டி. இவரது மகன் ஹரி (26). அதே பகுதியில் வசிப்பவர் பாலா (22). தசரா திருவிழாவை முன்னிட்டு, மாலை அணிவிப்பதற்காக இவர்கள் இருவரும் கோயிலுக்குச் சென்று விட்டு, அதிகாலை 3 மணி அளவில் பைக்கில் வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், கடற்கரை சாலையில் உள்ள மத்திய கடல் ஆராய்ச்சி மீன் வளர்ச்சிக் கழக அலுவலகம் அருகே வரும்போது, எதிரே வந்த கார் பைக் மீது மோதி உள்ளது. இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இதில் ஹரியின் தலையில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். மேலும், பாலா படுகாயம் அடைந்தார்.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் பக்தர்கள் சென்ற டெம்போ விபத்து; 12 பேர் உயிரிழப்பு - பிரதமர் நிவாரணம் அறிவிப்பு!
அதனைத்தொடர்ந்து, கார் அதிவேகமாக சென்றதில் மற்றொரு பைக் மீது மோதி உள்ளது. இதில் பைக்கில் பயணித்தவர்களில் வன்னியராஜா (35) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் வந்த ரவி (27) படுகாயம் அடைந்தார்.
இதில், வன்னியராஜா அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ரவி பலத்த காயத்துடன் தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து, பாலா தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர், இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் மற்றும் போலீசார், ஹரி மற்றும் வன்னியராஜா இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, காரை ஓட்டி வந்த விஜய் கணேஷ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தஞ்சாவூர் மாநகராட்சியில் மக்களுக்கு விழிப்புணர்வு கடிதம் மூலம் டெங்கு தடுப்பு பணிகள் தொடக்கம்!