தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் சமத்துவபுரத்தில் வசித்து வருபவர், முகமது ஜக்காரியா. புகைப்படக் கலைஞரான இவர் 'பாம்புகளின் நண்பனாக' பார்க்கப்படுகிறார். பாம்புகளின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் இப்பகுதியிலுள்ள குடியிருப்புகளில் பாம்பு வந்து விட்டால் அதனைபிடிப்பதில் வல்லவர். பாம்பினை பிடிப்பதற்காக தீயணைப்புத்துறையை அழைக்கும் முன்பே முகமது ஜக்காரியாவுக்கு அழைப்பு விடுக்கின்றனர், இப்பகுதி மக்கள்.
மேலும் இவர் இவ்வாறு குடியிருப்புகளில் புகுந்து பாம்புகளை பத்திரமாக மீட்டு காட்டுப்பகுதியில் விடுவதற்கு அந்த மக்களிடமிருந்து பணமோ, பொருளோ எதுவும் வாங்காமல் சேவையாக செய்து வருகிறார். இவரை கண்டே வளர்ந்த இவரது மகன்கள் அகமது ஜெரித், அகமது பாசிலும் பாம்பின் மீது கொண்ட பற்றினால், அது தொடர்பான உயர் படிப்பை மேற்கொண்டு பல்வேறு வியத்தகு சாதனைகளைப் புரிந்து வருகின்றனர்.
பாம்பினைப் பிடிக்க முகமது ஜக்காரியா உற்ற நபர்
கடந்த மார்ச் 23ஆம் தேதி, அப்பகுதியிலுள்ள ஒருவரின் வீட்டில் பாம்பு புகுந்ததை அடுத்து முகமது ஜக்காரியாவுக்கு பாம்பினைப் பிடிப்பதற்காக தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து முகமது ஜக்காரியா தனது இரு மகன்களையும் பாம்பினை மீட்டு காட்டில் விடுவதற்காக அனுப்பி வைத்துள்ளார்.
அங்கு சென்ற அவரது மகன்கள் அகமது ஜெரித், அகமது பாசில் இருவரும் அந்த வீட்டிற்குச் சென்று பாம்பினை தேடியுள்ளனர். ஆனால், அங்கு அவர்களுக்கு அதிர்ச்சியாக பாம்பு கிடைக்காமல் ஏராளமான பாம்பு முட்டைகள் கிடைத்துள்ளது. இந்த முட்டைகளை இங்கேயே விட்டுச் சென்றால், இந்த மக்கள் பாம்பு முட்டைகளை அழித்து விடுவார்கள் என எண்ணி மீட்டுக் கொண்டு வந்துள்ளனர்.
இதனையடுத்து அந்த முட்டைகளை வைத்து செயற்கை முறையில் அடைகாத்து பாம்புக் குட்டிகளைப் பிறக்க செய்யலாம் என முடிவு செய்த அகமது ஜெரித், பாம்பு முட்டைகளை செயற்கையான முறையில் அடைகாத்து 8 பாம்புக் குட்டிகளை பிறக்க செய்துள்ளார். "பிறந்த 8 பாம்பு குட்டிகளும் அழிந்து வரும் பாம்புகளின் பட்டியலில் உள்ள சாரை பாம்புக் குட்டிகள்" ஆகும்.
இதுகுறித்து அகமது ஜெரித் கூறுகையில், 'நான் தற்போது எம்.எஸ்.சி (M.Sc) வைல்டு லைஃப் பயாலஜி படித்திருக்கிறேன். அடுத்தபடியாக பிஹெச்.டி செய்ய காத்திருக்கிறேன். விளாத்திகுளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எவர் வீட்டிலாவது பாம்பு வந்து விட்டால், அதனைப் பிடிப்பதற்காகவே எங்களை அழைப்பார்கள். நாங்களும் உடனடியாக குறிப்பிட்ட நேரத்திற்குள் அங்கு சென்று பாம்பினைக் கைகளால் தொடாமல், துன்புறுத்தாமல், பிடிப்பதற்கான சாதனங்களைப் பயன்படுத்தி பிடித்து, பாதுகாப்பான முறையில் காட்டில் விட்டுவிடுவோம்.
பல்லுயிர்ப்பெருக்கத்தில் பாம்புகள்:
ஏனென்றால், எந்தக் காரணமும் இல்லாமல் கொல்லப்படுவது பாம்பு மட்டுமே. பாம்பு இருந்தால் மட்டும்தான் எலித் தொல்லைகளிலிருந்து பயிர்களைக் காக்க முடியும். இல்லையென்றால் உணவுப்பற்றாக்குறை பெரிய அளவில் வரும் நிலை உண்டாகும். ஆகையால் பாம்பினை பாதுகாக்க வேண்டியது நமது கடமை' எனக் கூறினார்.
இதனை எங்களுக்கு கற்றுக் கொடுத்தவர், எங்கள் தந்தை தான். எங்களுக்கு மிகுந்த ஆர்வத்தையும் ஊக்கத்தையும் தந்தவரும் அவர் தான். இதனால்தான் நான் வைல்ட் லைஃப் பயாலஜியும் எனது சகோதரர் அகமது பாசில் விலங்கியலையும் தேர்ந்தெடுத்துப் படிக்க காரணமாகும். எங்களது நோக்கம் வன விலங்குகளை காப்பாற்றுவது. அதிலும் குறிப்பாக பாம்புகளை காப்பாற்றுவதாகும்.
முகமது ஜக்காரியா பாம்புகளின் நண்பன் என்பதைக் காட்டும் விதமாக, தனது வீட்டையே காடு போன்ற தோற்றத்தில் வடிவமைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதையும் படிங்க: பருப்பு, எண்ணெய் கொள்முதல் டெண்டருக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி முறையீடு!