தூத்துக்குடி, ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்தவர் தினேஷ் (34). இவரது மனைவி அஞ்சலி. தினேஷ் தனியார் கப்பலில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். தற்போது மாத விடுமுறையில் சொந்த ஊரான தூத்துக்குடியில் உள்ள ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு வந்துள்ளார்.
இவர் கடந்த 8ஆம் தேதி, வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் மதுரையில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். இந்நிலையில், நேற்று (பிப்.13) மாலை தூத்துக்குடி திரும்பிய தினேஷ், வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர், அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 50 சவரன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.25 ஆயிரம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் வீட்டினுள் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா உடைக்கப்பட்டு, அது பதிவாகும் ஹார்டு டிஸ்க்கையும் திருடியவர்கள் தூக்கிச் சென்றிருப்பது கண்டறியப்பட்டது.
உடனடியாக இச்சம்பவம் குறித்து வடபாகம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறை ஆய்வாளர் அருள், கைரேகை நிபுணர்களுடன், துப்பறியும் நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அருகிலுள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மூலம் திருடியவர்களைக் கண்டறியும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 'ஏது என்னிடமே பணம் கேட்கிறாயா...' ஓசியில் 'பப்ஸ்' தராததால் அடிதடியில் இறங்கிய போதை பாய்ஸ்!