தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கட்டலாங்குளத்தில் அழகுமுத்து கோன் 309 ஆவது பிறந்த நாள் விழா ஜூலை 11 ஆம் தேதி நடக்கிறது. இதனையொட்டி நாலாட்டின் புதூர் காவல் நிலையத்தில் அழகுமுத்து கோன் வாரிசுதாரர்கள், நலச்சங்கம், தமிழக யாதவ இயக்க கூட்டமைப்பு, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் எம்.ஜெபராஜ் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், அழகுமுத்து கோனின் பிறந்த நாள் விழா கொண்டாடும் கிராமங்களில் பொறுப்பாளர்கள் காவல்துறையிடம் உரிய முன் அனுமதி பெற வேண்டும். விழா தொடர்பான பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் வைப்பதற்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல் பிளக்ஸ் பேனர்கள் வைப்பவர்கள் மீது சட்ட ரீதியான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், அனுமதி பெற்று வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்கள் 11 ஆம் தேதி மாலை 6 மணிக்குள் அகற்றப்பட வேண்டும். விழாவுக்கு இருசக்கர வாகனங்களில் வருவதற்கு அனுமதி கிடையாது. விழாவின் போது பட்டாசுகள் வெடிக்க அனுமதி கிடையாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் சுதேசன், அய்யப்பன், ஆவுடையப்பன், முத்துலட்சுமி, பத்மாவதி, உதவி ஆய்வாளர் தர்மராஜ் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.