தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு ஒன்றியத்துக்குள்பட்ட சன்னதுபுதுக்குடி, ராஜாபுதுக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிமுகவினர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுவருகின்றனர். இதில், அதிமுக சார்பில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜுவை பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். பின்னர், அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்தவெளி பரப்புரை வாகனம் மூலம் உரையாற்றினார்.
தொடர்ந்து, அமைச்சர் கடம்பூர் ராஜு வீதிகளில் இறங்கி வீடு வீடாகச் சென்று 10 ஆண்டு கால சாதனை துண்டுப் பிரதிகளைப் பொதுமக்களிடையே விநியோகம் செய்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
பின்னர், கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறுகையில் ’’நேற்றிரவு அதிமுக, அமமுக இரு தரப்பிலும் ஒரே இடத்தில் பரப்புரை செய்ய வேண்டிய சூழ்நிலை வந்தபோது காவல் துறை கேட்டுக் கொண்டதால் நான் என்னுடைய பரப்புரையை ரத்து செய்துவிட்டு, என்னுடன் வந்த வாகனங்களையும் வர வேண்டாம் என்று கூறிவிட்டு, சட்ட ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத் தனியாக காரில் சென்றேன்.
ஆனால், அமமுகவினர் என்னுடைய காரை வழிமறித்தனர். அதையெல்லாம், கடந்து நான் வந்தேன். அங்கு தயாராக வைக்கப்பட்டிருந்த வெடியை அமமுகவினர் என் கார் மீது வீசி எறிந்தனர். தொடர்ந்து, வாகனம் தீப்பற்றி எரியக்கூடிய சூழ்நிலை இருந்தது.
அந்த நேரத்தில் சட்ட ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகப் பொறுமையாகக் கடைப்பிடித்துவந்தோம். என்னுடைய கார் ஓட்டுநர் லாவகமாக காரை ஓட்டவில்லை என்றால் கார் தீப்பிடித்து எரிந்து என்னுடைய உயிருக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். இதைக்கண்டு, நான் அஞ்சப்போவதில்லை. தேர்தல் பணிக்கு வரும்போதே இப்படி அராஜகம் செய்யும்போது, நாளை தொகுதிக்கு பணிக்கு வரும்போது எப்படி நிலை இருக்கும் என்பதை மக்கள் கண்கூடாகப் பார்க்கிறார்கள்.
என்னுடைய தேர்தல் பணியைத் தடுப்பதற்காக கொலைசெய்ய முயற்சி செய்கின்றனர். ஏனெனில் என்னுடைய வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வேட்பாளராக நான் இருக்கிறேன்.
மேலும், 100 விழுக்காடு தொகுதி முழுவதும் சிறப்பாகப் பணியாற்றியதால் எளிதில் வெற்றிபெறுவேன். என்னுடைய வெற்றியைத் தொகுதி மக்கள் தங்களுடைய வெற்றியாகக் கருதுகிறார்கள்.
தோல்வியின் பயத்தினால் இப்படிப்பட்ட செயல்களில் அவர்கள் இறங்கியுள்ளனர். எதையும் சந்திக்க நான் தயாராக உள்ளேன். பதவி வரும்போது பணிவு வர வேண்டும், துணிவும் வர வேண்டும் என்று எம்ஜிஆர் சொல்லியுள்ளார்.
அதன்படி பணிவோடு மக்கள் பணியாற்றுகிறேன், களத்தில் துணிவோடு பணியாற்ற வேண்டும் என்றால் அதற்கும் நான் தயார்’’ என்று கூறினார்.
இதையும் படிங்க: ராமநாதபுரத்தில் பரப்புரை மேற்கொள்ளும் ஸ்டாலின்