தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே மேல பாண்டவர்மங்கலம் அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் தாமோதர பாண்டியன் மகன் கனகராஜூ (40). இவர் தனது வீட்டின் அருகே பேசிக்கொண்டு இருந்துள்ளார்.
அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த ஐந்து பேர், கனகராஜை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனைப் பார்த்த அவரது தாய் பார்வதி தடுக்க முயன்றுள்ளார். இதனால் பார்வதிக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே சம்பவ இடத்திலேயே கனகராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த அவரது தாய் பார்வதி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே, கனகராஜூக்கும் பூலோகபாண்டியன் மகன் பாலமுருகனுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக பாலமுருகன் கனகராஜை வெட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கனகராஜ் உறவினர்கள், பாலமுருகன் வீட்டை அடித்து நொறுக்கினர். தற்போது இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலைக்கு காரணமான 5 பேரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கிணறு அருகே மது அருந்திக் கொண்டிருந்த இளைஞர் பிணமாக மீட்பு!