கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த 65 வயது மூதாட்டி ஒருவர், கணவர் இறந்த நிலையில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 19ஆம் தேதி மூதாட்டி வீட்டின் மாடிப்படி அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் தனிப்படை அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க நபர் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில், அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் சம்பவத்தன்று மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்த நபர், அவரை பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் இதை யாரிடமாவது சொல்லி விடுவார் என நினைத்து கொலை செய்ததாக ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
நகைக்காக கொலை நடந்ததாக காண்பிக்க பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்த மூதாட்டியின் கழுத்தில் இருந்த 5 பவுன் நகையை திருடிக் கொண்டு அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். பின்னர் நகையை விற்ற பணத்தை வைத்து கொண்டு பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்ததாகவும், உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்ற போது அங்கிருந்த உறவினர்கள் கொடுத்த தகவலின் பேரில் அவரை மார்த்தாண்டத்தில் இருந்த ஒரு லாட்ஜில் வைத்து கைது செய்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
மூதாட்டி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க : மழை வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய நாளை சென்னை வரும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்