தூத்துக்குடி: கருப்பட்டி சொசைட்டியிலுள்ள பனை பொருள் அங்காடியை, இன்று பனை வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த எர்ணாவூர் நாராயணன், “கடந்த மாதம் 23 அன்று தமிழக பனை தொழிலாளர்கள் நல வாரிய தலைவராக பொறுப்பெற்று, இன்று உறுப்பினர்களை சேர்க்க தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை புரிந்தேன்.
இன்று உறுப்பினர் சேர்க்கை முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கடந்த 10 வருடங்களாக பனை தொழிலாளர்கள் நல வாரியம் செயல்படவில்லை. ஆகையால் 10 வருடங்களாக 10ஆயிரம் பேர்தான் உள்ளனர். மேலும் சேலம், ஈரோடு, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 1 லட்சம் உறுப்பினர்களைச் சேர்ப்பதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்களுக்கு பனை தொழிலாளர் நல வாரியம் இருப்பதே தெரியாமல் உள்ளது. இதற்கு கிராமம் கிராமமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, முகாம் நடத்தப்படும். கல்வி, திருமண உதவி என அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு மூலம் செய்து கொடுக்கப்படும். கடந்த 2006 ஆம் ஆண்டு மட்டுமே நல வாரியம் ஐந்து ஆண்டுகள் செயல்பட்டுள்ளது.
பின்னர் இப்போதுதான் செயல்பட தொடங்கியுள்ளோம். பட்டதாரி மாணவர்கள் பனை ஏறி வருகின்றனர். நிறைய இளைஞர்கள் படித்துவிட்டு வேலை இல்லாமல் உள்ளனர். அடுத்த ஆண்டு பனை தொழில் நன்றாக அமைந்து, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு முதலமைச்சர் பனை வெட்டக்கூடாது என்று உத்தரவு போட்டுள்ளார். ஆகவே பனையை வெட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய அவர், பனை தொழில் இல்லாத காரணத்தினால் கருப்பட்டி உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற 60 வயது முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். இதுவரை 10,848 பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர்.
பனை தொழிலாளர்களுக்கு வீடு கட்டி கொடுக்க ஏற்பாடு செய்யப்படும். மீனவர்கள் மற்றும் உப்பள தொழிலாளர்களுக்கு தொழில் தடை காலத்தில் நிவாரணம் வழங்குவது போல், பனை தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க முதலமைச்சரிடம் கூறி ஏற்பாடு செய்யப்படும்” என கூறினார்.
இதையும் படிங்க: கொடைக்கானலில் கனமழையால் பீன்ஸ் சாகுபடி பாதிப்பு; உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை