தூத்துக்குடி: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாட்டு மக்களை ஒன்றினைக்கு விதமாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்னும் பாதயாத்திரை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், நேற்று பயணத்தின் 16வது நாளாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் யாத்திரையை தொடங்குவதற்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அண்ணாமலை, "நீட் தேர்வின் தோல்வியால் மாணவரும், அவரது தந்தையும் உயிரிழந்திருப்பது வருத்தம் அளிக்கிறது. மேலும், நீட் தேர்வில் ஏராளமான ஏழை மாணவர்கள் தேர்ச்சி பெற்று வருகிறார்கள். அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது. ஆனால், அரசியல்வாதிகள் நீட்டை வைத்து அரசியல் செய்கிறார்கள்.
குறிப்பாக, திமுக நீட்டை வைத்து மோசமான அரசியலை செய்கிறது. தெலங்கானவில் அரசுப் பள்ளிகளில் நீட் தேர்விற்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் ஏன் நடத்தப்படவில்லை? திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் எத்தனை அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது?.
மேலும், நீட் தேர்வினை நீட்டாக பாருங்கள். எந்த கல்விக்கு தகுதித்தேர்வு இல்லை? நீட்டினால் இன்னொரு உயிர் போனால் அதற்கு திமுகதான் காரணம். மேலும், அரசியல் காரணங்களுக்காகவே ஆளுநரின் தேநீர் விருந்தை முதலமைச்சர் ஸ்டாலின் புறக்கணித்துள்ளார். கம்யூனிஸ்ட் கட்சிகள் தன் நிலைப்பாட்டை இழந்துள்ளது. மக்களின் உரிமைக்காக போராடிய கம்யூனிஸ்ட் கட்சியினர், இன்று திமுகவினரின் ஊழல்கள் குறித்து பேசுவதில்லை.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விஞ்ஞான திருட்டு செய்துள்ளார். திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் குறித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் பேசுவதே இல்லை. திமுக ஆட்சியில் சாதி மோதல்கள் அதிகரித்துள்ளது. வேங்கைவயல் பகுதியில் குடிநீரில் மலம் கலந்தவர்களை 240 நாட்களைக் கடந்தும் இன்னும் கைது செய்யவில்லை. மக்கள் பிரதிநிதிகளே மேல் சாதி, கீழ் சாதி என பேசும்போது மாணவன் சாதி உள்ளது என நம்புகிறான்.
இதைப் பார்த்து விஷம் ஊறியதாலே நாங்குனேரியில் வகுப்பறையில் நடந்த சண்டை வீடு புகுந்து வெட்டும் அளவு நடந்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியை திராவிட அரசு குழி தோண்டி புதைத்து விட்டார்கள். மற்ற கட்சியினர் யாத்திரை பயணம் பற்றி பேசுவதே வெற்றிதான். இந்த யாத்திரை நடைபயணத்தில் மக்களின் வரவேற்பு பிரதமர் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியாக வெல்லும் என்பதை இந்த பாதயாத்திரை உறுதி செய்கிறது" என தெரிவித்தார்.