தூத்துக்குடி: கோடை விடுமுறை, காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி பணியாளர்கள் நேற்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமைச்சர் கீதா ஜீவன் கூறுகையில், “அங்கன்வாடி பணியாளர்கள் தங்களுக்கு கோடை விடுமுறை வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடைய கோரிக்கையை அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. விரைவில் இதற்கான நல்ல முடிவு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
மேலும் தொடர்ந்து பேசிய அமைச்சர், ''அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்புப் போராட்டம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு தங்களை வருத்திக்கொள்ள வேண்டாம்’’ என்று அவர் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து, அங்கன்வாடி பணியாளர்களின் அனைத்து கோரிக்கைகளுக்கும் விரைவில் நல்ல தீர்வு காணப்படும் என்றும்; அவர் கூறினார். இதனையடுத்து அங்கன்வாடி பணியாளர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டெய்சி கூறுகையில், “கோடை விடுமுறை, காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலையிலிருந்து அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த கோரிக்கை தற்போது முதலமைச்சரின் கவனத்திற்கு வந்துள்ளது. விரைவில் தமிழக முதலமைச்சர் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக சமூக நலத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டே கோடை விடுமுறையை அறிவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்தப் போராட்டத்தை தற்காலிகமாக விலக்கி கொள்கிறோம்” என்றார்.
அமைச்சருடனான இந்தப் பேச்சுவார்த்தையில், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஹேமா மாலா, சிஐடியு மாநில துணைத் தலைவர் கண்ணன், மாநிலச் செயலாளர் ஆர்.ரசல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடி விஏஓ வெட்டிக்கொலை: அமைச்சர்கள், கனிமொழி எம்.பி நேரில் ஆறுதல்!