தூத்துக்குடி: கடந்த 17 மற்றும் 18 ஆகிய இரு தினங்கள் கனமழையின் காரணமாக தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. தற்போது மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வந்தாலும், தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணி பல்வேறு பகுதிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளப் பாதிப்புகளை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டு, தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், 'தமிழக அரசு உடனடியாக கூடுதல் கவனம் செலுத்தி, தற்போது செய்து கொண்டிருந்தாலும், இது போதுமானது கிடையாது. நேற்று வந்து பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இங்கேயே 2 நாட்கள் தங்கி அவர் தலைமையில் மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகள் மேற்கொண்டிருக்க வேண்டும்.
அப்படி செய்திருந்தால் நிச்சயமாக அனைத்து கிராம மக்களுக்கும் இந்த உதவிகள் சென்றடைந்திருக்கும். சில அமைச்சர்கள் இருக்கின்றார்கள். ஆனால், போதுமான வேகம் இல்லை. காலையில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு சென்று அங்கேயும் இதே பிரச்னையைத் தான் மக்கள் கூறுகிறார்கள். ஆனால், தூத்துக்குடியில் அதைவிட மோசமான சூழல் உள்ளது.
தூத்துக்குடி நகரத்தில் பல பகுதிகளில் மழைநீர் வடியவில்லை. பெரிய ராட்சச பம்புகள் வைத்து வெள்ள நீரை வெளியேற்றிருக்க வேண்டும். வெள்ளம் ஏற்பட்டு இன்றுடன் 6வது நாளாகியும், மீட்புப் பணியில் வேகமில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக முதல் தவணையாக 10 ஆயிரம் ரூபாய் உடனடியாக அரசு கொடுக்க வேண்டும், 6 ஆயிரம் ரூபாய் ஒரு ரேஷன் கார்டு அறிவித்திருக்கிறார்கள், அது நிச்சயமாக போதுமானது கிடையாது.
முதல் தவணை பத்தாயிரம் கொடுக்க வேண்டும், அடுத்தது பத்தாயிரம், அடுத்தது ஐந்தாயிரம் என 25 ஆயிரம் கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டருக்கு 17 ஆயிரம் ரூபாய் அறிவித்திருப்பதும் போதுமானது கிடையாது. ஒரு ஏக்கர் வாழை, நெல் பாதிப்பில் ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 'இவ்வளவு பெருவெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தோர்களுக்கெல்லாம் அரசு வீடு கட்டித்தர வேண்டும். உடனடியாக தேவைகள், இடைக்கால தேவைகள், நீண்ட கால தேவைகள் என அரசு செய்ய வேண்டும்.
சென்னை வானிலை வானிலை ஆய்வு மையத்தை இழுத்து மூடுவது குறித்து தாங்கள் கூறிய கருத்திற்கு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது நவீனப்படுத்திட்டோம் என தெரிவித்திருந்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, இதுதான் ஒரு முக்கியமான பிரச்னையா? தூத்துக்குடியில சாப்பாட்டுக்கு வழி இல்லாமல், கிராமத்திற்கு போகவில்லை என்பதெல்லாம் விட்டுவிட்டு நிர்மலா சீதாராமன் சொல்லிவிட்டார்களாம் என கோவத்துடன் பதில் தெரிவித்தார்.
நிர்மலா சீதாராமன் நாங்க நவீனப்படுத்திட்டோம் என்று சொல்கிறார்கள். என்னுடைய கேள்வி தமிழனாக என்னுடைய ஆதங்கம், வெளிநாடுகளில் இப்படி துல்லியமாக இரண்டு நாட்களுக்குப் பிறகு 4 மணியிலிருந்து 5 மணி வரை இந்த பகுதியில் மழை பெய்யும் எனும் சொல்கிறார்கள். இங்கே ஏன் அந்த தொழில்நுட்பம் ஏன் கொண்டுவரப்படவில்லை? சுதந்திரமடைந்து 76 ஆண்டுகள் ஆகியும் அந்த தொழில்நுட்பத்தை கொண்டுவர வேண்டியதுதானே.
இனிவரும் காலம் இதைவிட மோசமாக இருக்கும். இதைவிட பெரும் புயல், சூறாவளி வரும், கடுமையான வறட்சியும் வரும். அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். நம்முடைய வானிலை அப்டேட் ஆக இருக்க வேண்டும். உலகத்தரம் வாய்ந்த வானிலை இங்கே இருக்க வேண்டும். இந்த மாவட்டத்தில் இங்கே மழை பெய்யும், இங்கே கனமழை பெய்யும், லேசான மழை பெய்யும் என்பதெல்லாம் வேண்டாம்.
சரியாக தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மறுநாள் இவ்வளவு சென்டிமீட்டர் மழை பெய்யும் என்று சொல்லுங்கள், 'வெளிநாட்டில் சொல்வது ஏன் இங்கே சொல்ல முடியவில்லை? என்ற ஆதங்கம் தான் எனக்கு' என்றார். வானிலை ஆய்வு மையத்தை கொச்சைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தனக்கு கிடையாது. உலகத்தில் பல நாடுகளில் பார்த்துள்ளேன். அந்த முன்னேற்றம் இங்கும் வர வேண்டும்.
முன்கூடியே அறிவித்தார்கள் என்றால் உயிர் சேதம், உடமைகள் எல்லாம் நம் காப்பாற்றலாம். வருங்காலம் மிக சோதனையான மோசமான காலம் என்பதை நாம் பார்க்க போகிறோம். ஆகையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை நாம் எடுக்க வேண்டும். நவீன தொழில்நுட்பம் பயன்படுத்த வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் இவ்வளவு காலம் என்ன செய்து கொண்டு இருந்தார், 6 நாள் ஆகியும் மழைநீர் வடியவில்லை என்றால், நீதி ஒதுக்கீடு செய்ததை என்ன செய்தார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.