தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகிலுள்ள காயாமொழி கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இவர்களில் பலர் வியாபாரம், கல்வி மற்றும் பணி காரணமாக வெளிமாநிலம், வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஊர் சார்பில் சொந்த மண்ணில் அனைவரும் சந்தித்து அன்பைப் பரிமாறிக் கொள்ளும் வகையில் நிகழ்ச்சி நடத்த முடிவு செய்தனர். அதன்படி சொந்த ஊரில் ஒன்று கூடும் விழா நடத்தப்பட்டது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு கடந்தகால வரலாற்றுக் கண்காட்சியைத் திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, பெண்கள், குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியும், காயாமொழியில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டது. இச்சங்கமம் விழா நடைபெறுகிற மூன்று நாட்களிலும் அனைவருக்கும் சமமான விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில், வெளிநாடு, வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள், சொந்த ஊரில் இருப்பவர்கள் உட்பட சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும், சொந்த மண்ணில் பள்ளிப் பருவத்தில் பயின்ற நண்பர்கள் மற்றும் உறவினர்களை நேரில் சந்தித்து தங்கள் அன்பை வெளிப்படுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: தேனியில் கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றி அசத்திய சிறுவர்கள்!