தூத்துக்குடி: மதுரையில் நடைபெற இருக்கும் பொன்விழா எழுச்சி மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், அதிமுக துணை பொது செயலாளர் கே.பி முனுசாமி, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், வளர்மதி, செல்லூர் ராஜு, ஆர்.பி உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் பேசுகையில், "50 ஆண்டு காலம் நிறைவு செய்த போது இந்த இயக்கம் சந்தித்திராத பல்வேறு சோதனைகளையும், போராட்டங்களையும் நாம் சந்தித்து இருக்கின்றோம். கழகம் பிளவுப்பட்டு, சின்னம் முடக்கப்பட்டபோது சின்னத்தை ஜெயலலிதா மீட்டெடுத்தார்.
பின்னர், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சில பதவி வெறி பிடித்தவர்கள், தங்கள் குடும்பம் மட்டும் நல்லா இருந்தால் போதும் என்று எந்த இயக்கம் அவர்களுக்கு பதவிகளை வழங்கியதோ அந்த இயக்கத்தையே பிளவுபடுத்தி சின்னத்தை முடக்கினார்கள். ஆனால், அன்றைக்கு கழகத்தினுடைய பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தொண்டர்களோடு தொண்டராக இந்த இயக்கத்தில் தானும் ஒரு தொண்டராக இணைந்து மக்களுக்கு பல்வேறு திட்டங்களையும், உதவிகளையும் செய்து வந்தார்.
அதனைத் தொடர்ந்து இன்றைக்கு பல்வேறு பொறுப்புகளை வகித்து எனக்கு பிறகு நூற்றாண்டு காலத்திற்கு இந்த இயக்கம் நிலைத்து நின்று மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்ற அந்த கடமையை இன்றைக்கு பொறுப்பேற்று வழிநடத்திக் கொண்டிருக்கிற எடப்பாடியாரால் இந்த இயக்கம் துரோகங்களையும், சூழ்ச்சியையும் முறியடித்து கட்சி பிளவுப்பட்டு விடுமோ, சின்னம் முடக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் பயம் எல்லோருக்கும் இருந்தது.
ஆனால் தன்னுடைய புத்திசாலித்தனத்தால் செயல்பட்டு அன்பால் அனைவரையும் இணைத்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அந்த துரோகிகளிடமிருந்தும், பதவி வெறி பிடித்தவர்களிடமிருந்தும், தான் வளர்ந்தால் போதும், தன் குடும்பம் பிழைத்தால் போதும் என்று நினைத்தவர்களிடமிருந்து இந்த இயக்கத்தை அழிக்க நினைத்தவர்களிடம் இருந்து கட்சியை மீட்டு, கழகத்தை சிந்தாமல் சிதறாமல், உடையாமல், சின்னத்தை முடக்காமல், அனைத்து போராட்டங்களிலும் மக்கள் மத்தியில், சட்டமன்றத்திலும், நீதிமன்றத்திலும் வெற்றியை நிலைநாட்டி இந்த இயக்கத்தை காப்பாற்றி கொடுத்திருக்கின்ற ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே" எனறு சி.வி. சண்முகம் பேசினார்.
மேலும், தொண்டர்கள் என்றால் எடப்பாடி தலைமையில் அமைந்திருக்கின்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பதை நிருபிக்கின்ற வகையிலே இந்த மாநாடு நடக்கும் என்று சி.வி. சண்முகம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘யாரும் ஏஜெண்டுகளை நம்பி செல்ல வேண்டாம்’: பாதிக்கப்பட்ட பெண் விமான நிலையத்தில் கண்ணீர் மல்க பேட்டி