தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள ந. ஜெகவீரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தாஸ். இவர் அதிமுகவைச் சேர்ந்த புதூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் சுசிலா தனஞ்செயன் உறவினர் ஆவார்.
விளாத்திகுளம் தொகுதி அதிமுக வேட்பாளர் சின்னப்பனுக்கு ஆதரவாக தாஸ் செயல்பட்டுவந்தது மட்டுமன்றி, பரப்புரைக்கு அவருடைய வேன்களை அனுப்பிவைத்து வந்துள்ளார்.
சில நாள்களாக அங்கு அதிமுக திமுக நிர்வாகிகளிடையே மோதல் ஏற்பட்டுவந்த நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரும், திமுக பிரமுகருமான அழகுபாண்டியன், சில நபர்கள் தாஸை தாக்கிவிட்டு அவருடைய மூன்று வேன்களுக்குத் தீவைத்துள்ளனர்.
இதில், ஒரு வேன் முற்றிலுமாக எரிந்து நாசமடைந்தது. இதில், காயமடைந்த தாஸ் அருப்புக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
இதையடுத்து, அப்பகுதியில் பலத்த காவல் துறை பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. இது குறித்து காடல்குடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அழகுபாண்டி உள்பட நால்வரைத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: 'காமராசருக்கு மெரினாவில் இடம் கொடுக்க மறுத்தவர் கருணாநிதி!'