தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “நான் பல கூட்டங்களில் சொல்லியதை போல திமுக, அமமுகவுக்கு இடையே இருக்கும் உறவு தங்க தமிழ்ச்செல்வன் மூலம் வெட்டவெளிச்சமாகிவிட்டது. மைனாரிட்டி ஆட்சி நடத்தியது திமுக. அதிமுக பெரும்பான்மையான சட்டப்பேரவை உறுப்பினர்களோடு உள்ளோம். 22 தொகுதி இடைத்தேர்தலில் அனைத்திலும் வெற்றிபெற்று அதிமுக தலைமையில் பெரும்பான்மை ஆட்சித் தொடரும்.
ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு பலிக்காது என மக்களுக்குத் தெரியும். அவர் 23ஆம் தேதிக்கு பின்னர் கனவும் காண முடியாது. கல்வியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. திறமையான மாணவர்கள் உருவாக்கப்பட்டதால்தான் தமிழ்நாடு மாணவர்கள் அகில இந்திய அளவில் சிறந்த இடம் பெற்றுவருகின்றனர்.
திறமையின் அடிப்படையில் தமிழ்நாடு மாணவர்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகிறார்கள். சுமார் 10.5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருக நடத்தப்பட்ட தொழில் முனைவோர் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் 10 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டப்படும். 304 தொழிற்சாலைகள் அமைக்க ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் குறித்து தவறான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பிவருகிறார்கள். தோல்வி பயம் காரணமாக எதிர்க்கட்சிகள் இதுபோன்ற கருத்துகளை பரப்புகின்றனர். தேர்தல் ஆணையம் ஒரு தன்னாட்சி அமைப்பு என்பதை அனைவரும் நினைவில் கொள்ளவேண்டும்” என்றார்.