தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள காந்தி மைதானத்தில் சித்தர்கள் சங்கமம் என்ற பெயரில் சித்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு பங்கேற்றார்.
இதன் பின்னர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், " 2016ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் மறுவரையறை செய்ய வேண்டும் என திமுக நீதிமன்றத்தை நாடியது.
நீதிமன்ற உத்தரவுப்படி மாநிலத் தேர்தல் ஆணையம் வார்டுகளை முறையாக மறு வரையறை செய்து வெளிப்படையாக அறிவித்துள்ளது. நீதிமன்றமும் இதை ஏற்றுக் கொண்டு, தேர்தலுக்கு தடை இல்லை என்று சொன்ன பின்பு தான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதன் பின்பும் திமுக தமிழ்நாடு அரசை குறை கூறுவது, அவர்கள் மக்களை சந்திக்கப் பயப்படுகின்றனர் என்பதைக் காட்டுகிறது.
விக்கிரவாண்டி, நாங்குநேரி இரு சட்டமன்ற இடைத்தேர்தலிலும் திமுக தோல்வியடைந்ததன் மூலமாக அவர்களுக்கு ஏற்பட்ட ஜுரம் இன்னும் தணிந்தபடி இல்லை. திமுகவினருக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது. ஆகையால் மக்கள் மன்றத்தை சந்திப்பதற்கு பதில் நீதிமன்றத்தை அணுகி வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் எவ்வித குளறுபடியும் இல்லை.
ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தாமல், உள்ளாட்சிப்பதவிகள் ஏலம் விடப்பட்டால் அது செல்லாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜனநாயக முறையை மீறி உள்ளாட்சி பதவிகளுக்கு ஏலம் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்தப் பதவி செல்லாது என்ற நிலைப்பாட்டில் அரசும் உறுதியாக உள்ளது.
அதிமுக கூட்டணியில் எவ்விதக் குழப்பமும் இல்லை, கூட்டணியில் உள்ள தேமுதிக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் கடந்த ஒரு வாரமாக பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுக்கான வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன" என்றார்.
இதையும் படிங்க: பாலியல் குற்றங்களுக்கு என்கவுன்டர் தீர்வாகாது: மருத்துவர்கள் கருத்து