தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூரில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவை கண்டித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ வீட்டின் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீட் தேர்விலிருந்து விலக்கு பெறப்படும், டீசல் பெட்ரோல் விலை உயர்வு கட்டுப்படுத்தப்படும் என கூறி ஆட்சிக்கு வந்த திமுக தனது வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை எனக்கூறி திமுகவை கண்டித்து கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் அதிமுகவினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கடம்பூர் ராஜூ கூறுகையில், "ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்று, நீட்தேர்வு இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்த திமுக அரசு அதை நடைமுறைப் படுத்தவில்லை.
பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இது போன்ற முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை என்பது தான் எங்களின் குற்றச்சாட்டு. அதிமுகவை பொறுத்தவரை நீட் தேர்வில் எந்த சமரசமும் இல்லை. நாங்கள் இப்போதும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறோம்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும் போதும் சரி, தற்போது இரட்டை தலைமை இருக்கும் போதும் சரி அதிமுகவில் ஜனநாயகம் இருக்கிறது. ஜெயலிதா இருக்கும் போது எவ்வாறு அதிமுக கட்டுக்கோப்பாக இருந்ததோ, அதே போல தான் தற்போது அதிமுக கட்டுக்கோப்பாகவே உள்ளது" என்றார்.
அதிமுகவை மீட்டெடுப்போம் என டிடிவி தினகரன் கூறியுள்ள கருத்து பற்றிய கேள்விக்கு பதிலளித்தவர், 'தேர்தலுக்கு பின்னர் முதன் முதலாக அவர் வாய் திறந்திருக்கிறார். டிடிவி தினகரன் ஒரு கட்சி ஆரம்பித்து அதை வழி நடத்தி வருகின்றார். அவர்கள் கட்சி ஆரம்பித்து, நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை என இரண்டு பொதுத் தேர்தல்களைச் சந்தித்துள்ளனர். எந்த தேர்தலிலும் அவர்கள் வெற்றி பெறவில்லை. மக்களே அவர்களை நிராகரித்துள்ளனர். அதிமுக பற்றி பேசுவதற்கு அவருக்கு தார்மீக உரிமை இல்லை' எனக் கூறினார்.
இதையும் படிங்க: 'பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்படுகிறோம்' - ஓ.பி.ரவிந்திரநாத்