தூத்துக்குடி: அசோக் நகர் எட்டாவது தெருவைச் சேர்ந்தவர் ரவி (50). இவரது மனைவி மாலா (49). ரவி - மாலா தம்பதியினருக்கு ஒரு மகள், இரு மகன்கள் ஆகியோர் உள்ளனர்.
மகன்கள் இருவரும் கல்லூரியில் படித்துவருகின்றனர். மகளுக்கு சில நாள்களுக்கு முன்னரே திருமணம் நடைபெற்றுள்ளது. ரவி சிப்காட் பகுதியில் இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் தொழில் செய்துவருகிறார்.
இந்நிலையில் பி. அன்டி காலனி பகுதியைச் சேர்ந்த சூசை மச்சாது (48), கடந்த 15 ஆண்டுகளாக ரவி வீட்டில் குடும்ப உறுப்பினரைப் போல் பழகிவந்துள்ளார்.
சூசைமச்சாது பணத்தை வட்டிக்கு விடும் தொழில் செய்துவருகிறார். சமீபத்தில் நடைபெற்ற ரவியின் மூத்த பெண் திருமணத்திற்கான அனைத்துச் செலவுகளையும் சூசை மச்சாதே கவனித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜூன் 26) அசோக்நகரில் உள்ள வீட்டில், சூசை மச்சாது, மாலா ஆகிய இருவரும் பேசிக்கொண்டிருந்துள்ளனர்.
அப்போது அங்கு வந்த ரவி, இருசக்கர வாகனத்திற்கு பெயிண்ட் அடிக்கப் பயன்படுத்தப்படும் அமிலத்தை இருவரது முகத்திலும் வீசியுள்ளார். மேலும் சூசை மச்சாதுபின் மகன் கெர்பின் மீதும் அமிலத்தை வீசிவிட்டு ரவி தப்பியோடியுள்ளார். இதில் மூவரும் பலத்த காயமடைந்தனர்.
சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் மூவரையும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தலைமறைவான ரவியைத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: பொதுமக்களைக் கத்தியைக் காட்டி மிரட்டிய போதை இளைஞர்கள்: தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு!