தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே உள்ள மணப்பாடு பகுதியைச் சேர்ந்தவர், ஆசிரியை மெட்டில்டா. இவர் உடன்குடி பகுதியில் வசித்து வந்தார். ஆசிரியை வீட்டில் மே 10-ஆம் தேதி(நேற்று) மாலை அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது மெட்டில்டா இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, ஆசிரியை மெட்டில்டா வீட்டு மாடியில் நின்று கொண்டிருந்த கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த தீபக் என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்தனர். மேலும், ஆசிரியை கொலை குறித்து விசாரணை நடத்திய போது, அக்கம் பக்கத்தினர் தீபக் ஆசிரியரின் உறவுக்காரர் எனவும் இவர் ஆசிரியரிடம் பணம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
தனியாக இருந்த ஆசிரியை பணம், நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணமா? என பல்வேறு கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஆசிரியை மெட்டில்டா கைபேசியை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், உடன்குடி பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பல்வீர்சிங் மீதான புகார்களை வாபஸ் பெறும்படி எஸ்.பி. மிரட்டினாரா? - வக்கீல் கைதின் பின்னணி என்ன?