தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் கோவில்பட்டி மற்றும் அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். கார்த்திகேயனிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு காஷ்மீரில் இருந்து சாயில் குமார் என்ற பெயரில் ஒருவர் வாட்ஸ் அப் மூலம் அழைத்து பேசியுள்ளார். அதில், ராணுவ வீரர் உடையுடன் இருந்த நபர் தனக்கு பர்னிச்சர் சாமான்கள் வேண்டும் எனவும் சாத்தூரில் உள்ள ஒரு நபருக்கு அன்பளிப்பாக கொடுக்க வேண்டும், உங்களது கடையை ஆன்லைன் மூலம் பார்த்து தெரிந்து கொண்டேன் என கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து கார்த்திகேயன், ராணுவ வீரரான சாகுல் குமாருக்கு வாட்ஸ் அப் மூலம் சோபா, மேஜை, கட்டில் உள்ளிட்ட பல்வேறு மாடல்களை அனுப்பி உள்ளார். இதை தொடர்ந்து கார்த்திகேயனிடம் மீண்டும் தொடர்பு கொண்ட சாயில் குமார் தனக்கு இந்த சோபா மற்றும் இந்த கட்டில் பிடித்துள்ளது. இதற்கான விலை எவ்வளவு என்று கேட்டுள்ளார். 80 ஆயிரம் ரூபாய் என கார்த்திகேயன் கூறிய நிலையில், உடனே முதலில் 65ஆயிரம் ரூபாய் கூகுள் பே மூலம் அனுப்புகிறேன் என்று கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து தங்களது நிறுவனத்தின் கூகுள் ஸ்கேனரை அவருக்கு வாட்ஸ் அப் மூலம் கார்த்திகேயன் அனுப்பியிருக்கிறார். அதன்பின் மீண்டும் வாட்ஸ் அப் மூலம் கார்த்திகேயனை தொடர்பு கொண்ட அவர், ராணுவத்தில் இருப்பதால் தங்களுக்கு கூகுள் பே மூலம் பணம் அனுப்ப முடியாது. எனவே தங்களது பெர்சனல் நம்பரை தாருங்கள் அதன் மூலம் பணம் அனுப்புகிறேன் என கூறியிருக்கிறார்.
இதைத்தொடர்ந்து கார்த்திகேயன் தனது மகன் வங்கி கணக்கு எண்ணை சாகில் குமாருக்கு அனுப்பியுள்ளார். இதில் இரண்டு தடவை ஒரு ரூபாய் ஒரு ரூபாய் போட்டு சாயில் குமார் அடுத்த கட்டமாக தான் ரூபாய் 65 ஆயிரம் அனுப்புவதாக கூறியுள்ளார். பின்னர் கூகுள் பே மூலம் 65 ஆயிரம் ரூபாய்க்கான லிங்க் அனுப்பி, கார்த்திகேயன் மகன் அக்கவுண்டில் இருந்த 65 ஆயிரம் ரூபாயை எடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் மற்றும் அவரது குடும்பத்தினரும் சாயில் குமாரை தொடர்பு கொண்டு எங்களது அக்கவுண்டில் இருந்து பணத்தை எடுத்து உள்ளீர்கள் என கேட்டதற்கு எனக்கு google pay மூலம் ரூ.500 போடுங்கள் உங்களுக்கு உங்கள் பணத்தை திருப்பித் தருகிறேன் எனக் கூறியிருக்கிறார். பின்னர், அதனைத் தொடர்ந்து 35 ஆயிரம், 18 ஆயிரம் ரூபாய் அனுப்புகிறேன் என மீண்டும் அதே போல் ரெக்வஸ்ட் கொடுத்துள்ளார்.
பின்னர் சுதாரித்துக் கொண்ட கார்த்திகேயன் மோசடியாக தனது மகன் வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் பயணத்தை திருடியதை தெரிந்து கொண்டார். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட கார்த்திகேயன் தூத்துக்குடி மாவட்ட சைபர் க்ரைம் குற்றப்பிரிவு காவல் துறையில் மோசடி நபர் சாயில் குமார் குறித்து ஆன்லைனில் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல் துறை விழிப்புணர்வு அறிக்கை:
ஆன்லைன் மூலம் ஒவ்வொரு நாளும் புதிய வடிவில் மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு காவல் துறை பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது கூகுள் பே மூலமாக நூதன மோசடி ஒன்று அரங்கேறி வருகிறது. யாரோ ஒருவர் தெரிந்தே உங்கள் கணக்கு அல்லது கூகுள் பேவிற்கு பணம் அனுப்புகிறார்.
பின்னர் உங்கள் கணக்கில் தவறுதலாக பணம் போட்டுள்ளதாக உங்களுக்குத் தெரிவிக்க உங்களை அழைக்கிறார். அதனை தொடர்ந்து பணத்தை அவர்களின் எண்ணுக்கு திருப்பி அனுப்புமாறு கோருகிறார். நீங்கள் பணத்தை திருப்பி அனுப்பினால், உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படும். எனவே யாராவது உங்கள் கணக்கில் தவறாகப் பணம் அனுப்பியிருந்தால், அழைப்பாளரிடம் அடையாளச் சான்றுடன் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு வந்து பணமாக வாங்கி கொள்ள சொல்லுங்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி தற்போது தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளதாகவும், அதை கவனத்தில் கொள்ளவும் என தமிழ்நாடு காவல் துறை எச்சரிக்கை செய்துள்ளது. மேலும், பொதுமக்கள் கவனத்தோடு கையாள வேண்டும் என்றும் தமிழ்நாடு காவல் துறை கேட்டு கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: சகபயணியை ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த சிவகங்கையைச் சேர்ந்த நபர் கைது!