தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 2ஆவது தெருவை சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி பேச்சியம்மாள்.
இவர்களிடம் கோவில்பட்டி முத்துநகரைச் சேர்ந்த முத்துராமலிங்கம் (44) என்பவர், குடும்ப பிரச்னை காரணமாக உங்கள் குடும்பத்திற்கு நேரம் சரியில்லை, உயிர் பலி ஏற்படும் எனக் கூறியுள்ளார்.
மேலும், இதனை போக்க தங்க நகையை வைத்து பூஜை செய்து பரிகாரம் செய்தால் குடும்ப பிரச்னை தீர்ந்துவிடும் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பிய பேச்சியம்மாள் தனக்குச் சொந்தமான 2 1/2 சவரன் தங்க நகை, அவரது சகோதரர் காசிராஜனின் 4 1/2 சவரன் தங்க நகையை வைத்து மே மாதம் 7ஆம் தேதி இரவு பேச்சியம்மாள் வீட்டில் வைத்து முத்துராமலிங்கம் பூஜை செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் இரு குடும்பத்தினரையும் வெளியே நிற்க சொல்லிவிட்டு பேச்சியம்மாள் வீட்டிற்குள் உள்ள பூஜை அறையில் இரண்டு கூஜாவில் நகைகளை வைத்துள்ளதாகவும், 40 நாள்கள் கழித்து தான் கூஜாவை திறக்க வேண்டும் எனக் கூறிவிட்டு முத்துராமலிங்கம் சென்றுள்ளார்.
மீண்டும் யாருக்காவது பரிகாரம் செய்ய வேண்டுமா? எனக் கேட்டதையடுத்து சந்தேகம் அடைந்த அய்யனார். அறையிலுள்ள கூஜாவை திறந்துப் பார்த்துள்ளார். அப்போது அதில் தங்க நகை ஏதும் இல்லை எனத் தெரியவந்தது.
இதையடுத்து இது தொடர்பாக பாதிக்கப்பட்ட 3 பேரும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கடந்த 2 நாள்களுக்கு முன்பு முத்துராமலிங்கத்தினை கைது செய்து கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் முத்துராமலிங்கத்திற்கு கரோனா பரிசோதனை செய்ததில் அவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து முத்துராமலிங்கத்தை கோவில்பட்டியிலுள்ள தனியார் கல்லூரியில் கரோனா சிகிச்சை முகாமில் அனுமதித்துள்ளனர்.