நாடு முழுவதும் தேசியக் குடல் புழு நீக்க வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி, திரேஸ்புரம், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கலந்துகொண்டு, பள்ளி மாணவ மாணவிகளுக்கும் சிறுமிகளுக்கும் மாத்திரைகளை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேட்டி அளிக்கையில், “பள்ளி மாணவ, மாணவிகள் ஆரோக்கியமாகவும், நல்ல உடல் நலத்தைப் பேணும் வகையிலும் ஐந்து முதல் 19 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.
மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாக அப்பகுதியில் 19 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள், மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் விடுபட்டவர்களுக்கு வருகின்ற 28ஆம் தேதி வீடு வீடாகச் சென்று மாத்திரைகளை வழங்கவுள்ளோம். தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 12,500 பேரில் 98 சதவிகிதம் பேர் மீண்டுள்ளனர்.
பள்ளி, கல்வி நிலையங்கள் திறக்கப்பட உள்ளதால் அவற்றில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கோவிட் கேர் நிலையங்கள், காய்ச்சல் முகாம்கள் உள்ளிட்டவை படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருகின்றன. காய்ச்சல் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் மருத்துவமனைகளுக்கு மாற்றப்படுகின்றனர். மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் சிலிண்டர் வசதியுடன் கூடுதலாக 100 படுக்கைகள் அமைக்கும் பணியும் சுகாதாரத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.