தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து இன்று காலை 5:30 மணிக்கு திருநெல்வேலிக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. பேருந்தை ஓட்டப்பிடாரம் பகுதியில் உள்ள கப்பிக்குளம் கிழக்கு தெருவை சேர்ந்த ஓட்டுநர் மகேஷ் என்பவர் ஒட்டிச் சென்றுள்ளார்.
இந்த பேருந்தானது, மறவன்மடம் தனியார் கல்லுரி அருகே சென்று கொண்டிருக்கும் போது புதுக்கோட்டை அருகேயுள்ள செக்காரக்குடியில் இருந்து தூத்துக்குடி காய்கறி சந்தைக்கு வந்த லோடு வேன் ஒன்று பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் லோடு வேனில் வந்த வியாபாரிகள் 2 பேரும், லோடு வேனில் லிப்ட் கேட்டு வந்த 3 பேர் மற்றும் அரசு பேருந்து நடத்துநர் வெள்ளைச்சாமி, பேருந்தில் பயணம் செய்த ராமச்சந்திரன் உட்பட 7 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டடு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜிக்கு மேலும் 7 நாட்கள் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!
இச்சம்பவம் குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், செக்காரக்குடியில் காய்கறிகடை நடத்தி வரும் சுடலை, அவரது மகன் பேச்சிமுத்து ஆகிய இருவரும் அதிகாலை புறப்பட்டு தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டில் காய்கறி வாங்க லோடு வேனை ஓட்டிக்கொண்டு வந்துள்ளனர்.
அப்போது அந்த வேனில் துத்துக்குடியில், கட்டிட வேலைக்கு செல்வதற்காக ஊர்க்காவலன், கார்த்திக் ராஜா மற்றும் தூத்துக்குடியில் உள்ள ஐஏஎஸ் அகாடமியில் படித்து வரும் மாணவர் முருகப்பெருமாள் ஆகிய 3 பேரும் லிப்ட் கேட்டு பின்னால் ஏறி வந்தபோது விபத்தில் சிக்கியது தெரியவந்தது.
மேலும், விபத்து நடைபெற்ற நெல்லை - தூத்துக்குடி 4 வழிச்சாலை மறவன்மடம் பகுதியில் சாலை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, அந்தச் சாலை இருவழிச் சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இதனை முறையாக சாலைப்பணிகள் நடைபெற்று வருகிறது என அறிவிப்பு பலகைகள் வாகன ஓட்டிகள் அறியும் வகையில் வைக்கப்படாததால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், முறையான எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: திறக்கப்படாத அரசு கால்நடை மருத்துவ கட்டடத்தில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான உபகரணங்கள் திருட்டு!