தூத்துக்குடி: கடலோர காவல் படைக்குச் சொந்தமான வஜ்ரா என்ற ரோந்து கப்பல் நேற்று(டிச.14) பிற்பகல் நடுக்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தன. அப்பொழுது ரோந்துக் கப்பலைப் பார்த்த நாட்டுப் படகு ஒன்று வேகமாகச் சென்றது. இதைத் தொடர்ந்து கடலோர காவல்படை படையினர் நாட்டுப் படகைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
பின்னர் கடலோர காவல் படையினர் நாட்டுப்படகில் இறங்கி சோதனை செய்ததில் அதில் பண்டல் பண்டலாக ரூபாய் இரண்டரை கோடி மதிப்புள்ள 3 டன் பீடி இலைகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து படகில் இருந்த ஆறு மீனவர்களிடம் நடத்திய விசாரணையில் தூத்துக்குடியைச் சேர்ந்த காட்வின், பிச்சையா, மில்டன் ,டார்சன், கிங் ,ரட்சகர் ஆகியோர் என தெரியவந்தது. தூத்துக்குடி அருகே புல்லாவெளி கடல் பகுதியிலிருந்து இலங்கைக்கு இந்த பீடி இலைகளைக் கடத்திச் சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், இந்திய கடலோர காவல் படையினர் விசாரணைக்குப் பின் நாட்டு படகுடன் 6 மீனவர்களையும் கைது செய்து தூத்துக்குடி பழைய துறைமுகம் கொண்டு வந்து கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மேலும், கியூ பிரிவு போலீசார், மற்றும் உள்ளூர் போலீசார் விசாரணை நடத்திய பிறகு தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கடத்தலில் ஈடுபட்ட 6 மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட 3 டன் பீடி இலைகளைச் சுங்கத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க:வேகமாக நிரம்பும் வைகை அணை; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!